கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் கடந்த 3 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளர்கள் அரசிடம் பலமுறை வைத்த கோரிக்கையையடுத்து கொரோனா வழிகாட்டுதல் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது. படப்பிடிப்பில் அதிக கூட்டம் இருக்கக்கூடாது, பணிக்கு வருபவர்களுக்குத் தினமும் டெம்ப்ரேச்சர் பரிசோதனை செய்ய வேண்டும், பார்வையாளர்கள் அனுமதிக்கக் கூடாது என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் படப் பிடிப்பு தயாராகி விட்டதாகக் கூறியிருந்தார். முன்னதாக கொரோனா ஊரடங்கில் சுமார் 7 மாத காலம் பாதுகாப்பு கருதித் தனி வீட்டில் வசித்து வந்தார் ஸ்ருதி. படப்பிடிப்புக்குச் செல்லும் முன் அவர் கொரோனா கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்றதுடன் அதற்காகத் தான் வாங்கி இருந்த ஸ்பெஷல் உடையையும் அணிந்திருந்தார்.
இந்நிலையில் லாபம் படப்பிடிப்பிலிருந்து பாதியில் ஸ்ருதி வெளியேறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வழிகாட்டுதலுடன் படப்பிடிப்பில் சம்பிரதாயத்துக்குச் சொல்லாமல் அதை அவர் நடைமுறையிலும் கடைப்பிடித்ததே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று தெரிகிறது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படம் லாபம். எஸ்.பி. ஜனநாதன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தர்மபுரியில் நடந்து வருகிறது. பிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் அவர்களை காண ஏராளமான கூட்டம் படப்பிடிப்பு தளத்தில் கூடியது. கூட்டம் அதிகமானால் தொற்று பரவ அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறி படப்பிடிப்பிலிருந்து ஸ்ருதி ஹாசன் பாதியிலேயே வெளியேறினார். இது படக் குழுவுக்கு அதிர்ச்சியை அளித்தது.