நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்தது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். எனவே உரிய நஷ்ட ஈட்டுத் தொகையை 4 மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும், மகராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசுக்கும்இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் நீடித்து வருகிறது. மகாராஷ்டிர அரசுக்கு எதிராகவும், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகவும் கங்கனா கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மும்பையிலுள்ள கங்கனாவின் பங்களாவின் ஒரு பகுதியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது.
அங்கு ரனாவத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. மாநகராட்சி விதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று கூறி கட்டடம் இடிக்கப்பட்டது. இதன்பின்னர் கங்கனா முன்பை விட ஆக்ரோஷமாக உத்தவ் தாக்கரேவை கடுமையாக தாக்கி வந்தார். மேலும் தன்னுடைய பங்களாவை இடித்து தள்ளிய மும்பை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது, நடிகை கங்கனா ரனாவத்தின் பங்களாவை இடித்தது மும்பை மாநகராட்சியின் பழிவாங்கும் நடவடிக்கையே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.
இது தொடர்பாக மும்பை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். பங்களாவை இடித்ததில் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பது குறித்து கணக்கெடுக்க ஒருவரை நீதிமன்றம் நியமித்துள்ளது. அடுத்த வருடம் மார்ச்சுக்கு முன்பாக நஷ்ட ஈட்டுத் தொகையை கணக்கிட்டு அதை நடிகை கங்கனா ரனாவத்துக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மும்பை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கங்கனாவின் சில கருத்துக்கள் ஏற்கத்தக்கதல்ல என்றும், பொது இடங்களில் மரியாதைக் குறைவான வார்த்தைகளை பேசக் கூடாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.