நடிகை பலாத்கார வழக்கு.. நீதிமன்றத்தை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக கேரள அரசு முடிவு

by Nishanth, Nov 27, 2020, 13:40 PM IST

பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கேரள உயர்நீதிமன்றம் மறுத்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுக கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட நடிகையின் கோரிக்கையை ஏற்று ஒரு பெண் நீதிபதி தலைமையில் இந்த தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த விசாரணை நீதிமன்றம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட நடிகை திடீரென குற்றம் சாட்டினார். கேரள அரசு தரப்பும் இதே குற்றச்சாட்டை கூறியது. இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி நடிகை சார்பிலும், அரசுத் தரப்பு சார்பிலும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு விசாரணையை நிறுத்தி வைத்தது. இதன் பின்னர் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தை மாற்ற முடியாது என்றும், அவ்வாறு மாற்றினால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்றும் கூறியது. மேலும் விசாரணை நீதிமன்றத்துடன் அரசுத் தரப்பு ஒத்துப்போக வேண்டும் என்றும், உடனடியாக விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதன்படி கடந்த 23ம் தேதி விசாரணை மீண்டும் தொடங்கியது.

ஆனால் அரசுத் தரப்பு வழக்கறிஞர் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து விசாரணையில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. உடனடியாக வேறு அரசுத் தரப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக கேரள அரசு தீர்மானித்துள்ளது. குற்றவியல் சட்டம் 406 பிரிவின் படி விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விசாரணை நீதிமன்றத்தை மாற்றக்கோரி அரசுத் தரப்பே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீர்மானித்துள்ளது நடிகை பலாத்கார வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading நடிகை பலாத்கார வழக்கு.. நீதிமன்றத்தை மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக கேரள அரசு முடிவு Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை