ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம் என்பது அவரது இன்றைய(நவ.30) ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தெரிய வந்துள்ளது. அரசியலுக்கு வருவாரா அல்லது மாட்டாரா என்பது குறித்துதான் இன்றும் அவர் ஆலோசித்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996ம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சிக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தார். இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ஆவேசமாக முழங்கினார். அந்த தேர்தலுக்கு பிறகு அவர் அரசியல்ரீதியாக விமர்சிப்பதை தவிர்த்தார். ஆனால், அவரது ரசிகர்கள் அவரை கட்சி தொடங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ரஜினியும் அவ்வப்போது மாறி, மாறி பேசி வந்தார். இப்படியாக அரசியலுக்கே வராமல், நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டுள்ள ரஜினி இன்று(நவ.30) தனது இறுதி முடிவை அறிவிக்கப் போகிறார் என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு காரணம், அவர் தனது மன்ற நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருப்பதுதான். இதையொட்டி, காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரஜினிகாந்த் வந்தார். முகக்கவசம் அணிந்த அவர், மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, ரஜினி மக்கள் மன்றத்தின் 37 மாவட்டச் செயலாளர்களிடமும் தனித்தனியே கருத்து கேட்டார். இந்த ஆலோசனையின் போது சில மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் குறித்து ரஜினி அதிருப்தி தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஜினியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொண்டதாகவும், அது பற்றிய தகவல் தனக்கு கிடைத்ததாகவும் ரஜினி கூறியிருக்கிறார். இந்நிலையில், சுமார் ஒன்றரை மணி நேரம் கூட்டம் நடந்தது. இதன்பின்னர், ரஜினி காந்த் தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர் ஒருவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: ரஜினி புதிய கட்சி தொடங்குவது பற்றியோ, அவரே முதல்வர் வேட்பாளராக வருவாரா என்பது குறித்தெல்லாம் இன்று ஆலோசிக்கவில்லை. அரசியலுக்கு அவர் வருவாரா, மாட்டாரா என்பது குறித்தும், அவரது உடல்நிலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் முழுமையாக கட்டுப்படுவோம். என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து மாலைக்குள் ரஜினி அறிக்கை வெளியிடுவார் இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார். ராமநாதபுர மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வநாதன் கூறுகையில், தலைவர்தான் எங்களுக்கு தெய்வம். அவரை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். அவர் என்ன முடிவெடுத்தாலும் அதை முழுமனதோடு ஏற்போம். ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவரது முடிவு இருக்கும். இன்று மாலைக்குள் அவர் அறிவிப்பு வெளியிடுவார் என்றார்.