சமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு?

by Nishanth, Nov 30, 2020, 13:09 PM IST

கடந்த சில நாட்களாக பிரபல மலையாள பாடகி வைக்கம் விஜயலட்சுமி தன்னுடைய சோகமான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இதனால் அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். ஆனால் தன்னுடைய மகள் நலமாக இருப்பதாகவும், அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் வைக்கம் விஜயலட்சுமியின் தந்தை தெரிவித்துள்ளார். கடந்த 2003ல் மலையாளத்தில் வெளிவந்த நடிகர் பிருத்விராஜ் நடித்த செல்லுலாய்டு என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. இவர் கண்பார்வை இல்லாதவர். காற்றே காற்றே என்ற இவரது முதல் பாடலே மலையாள ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப் பாடலுக்கு அந்த ஆண்டின் கேரள அரசின் சிறந்த பாடகிக்கான சிறப்பு ஜூரி விருது கிடைத்தது.

பின்னர் ஜெயராம் நடித்த நடன் என்ற படத்திலும் இவர் ஒரு பாடல் பாடினார். அந்தப் பாடலுக்கு கேரள அரசின் சிறந்த பாடகிக்கான விருது கிடைத்தது. இதன் பின்னர் ஏராளமான மலையாள பாடல்களைப் பாடிய இவர் 2014ல் குக்கூ என்ற தமிழ் படத்தில் பாடினார். இதன் பின்னர் தமிழில் வெள்ளைக்கார துரை, இடம் பொருள் ஏவல், மாசு என்கிற மாசிலாமணி, பாகுபலி, தெறி, 10 எண்றதுக்குள்ள, வீரசிவாஜி உட்பட ஏராளமான படங்களில் பாடினார். கணீர் கணீர் என்ற இவரது குரல் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்துப்போனது. இவர் ஒரு பாடகி மட்டுமில்லாமல் காயத்ரி வீணா என்ற அறிய ஒரு இசைக்கருவியை வாசிப்பதிலும் வல்லவர் ஆவார். இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் இவருக்கு திருச்சூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால் திருமணத்திற்குப் பின்னர் பாடக்கூடாது என்று அவர் கட்டாயப்படுத்தியதால் அவரை திருமணம் செய்ய வைக்கம் விஜயலட்சுமி மறுத்து விட்டார். இதையடுத்து அந்த திருமணம் நடக்காமல் போனது. இந்நிலையில் கடந்த 2018ல் மிமிக்ரி கலைஞரான அனூப் என்பவரை விஜயலட்சுமி திருமணம் செய்தார். தன்னைப் போல அனூப்பும் கலைஞர் என்பதால் தங்களுக்கு இடையே எந்தப் பிரச்சனையும் வராது என்று திருமணத்தின் போது விஜயலட்சுமி கூறினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வைக்கம் விஜயலட்சுமி எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் விஜயலட்சுமி சமூக இணையதளங்களில் தன்னுடைய சோகமான சில போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.

இதனால் விஜயலட்சுமிக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர். அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வைக்கம் விஜயலட்சுமியின் தந்தை முரளீதரன் ஒரு மலையாளப் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எனது மகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தற்போது கொரோனா காலம் என்பதால் தான் எந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் சந்தோஷமாக என்னுடைய வீட்டில் உள்ளார். எனது மகள் குறித்து சமூக இணையதளங்களில் சில தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவரது போட்டோவை வேறு யாரோ பகிர்ந்துள்ளனர் என்று கூறினார்.

You'r reading சமூக வலைதளங்களில் சோகமான போட்டோக்கள்.. பிரபல பாடகிக்கு என்ன ஆச்சு? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை