அதிமுக ஆட்சியின் பாரத்நெட் ஊழலை எதிர்த்து பதவி விலகிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, கமலின் ம.நீ.ம. கட்சியில் சேர்ந்துள்ளார். தமிழக அரசில் ஓசூர் சப்-கலெக்டர் முதல் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றியவர் டாக்டர் சந்தோஷ்பாபு. 1995-ம் ஆண்டு பேட்ச் மூத்த ஐ.எ.ஏஸ் அதிகாரியான இவர் கடைசியாக தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக இருந்தார். அப்போது, 1815 கோடி பாரத்நெட் டெண்டர் விதிகளை ஒரு கம்பெனிக்கு ஏற்ப வளைக்கச் சொல்லி எடப்பாடி அரசு இவருக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வில் வெளியேறினார். இந்நிலையில், சந்தோஷ்பாபு இன்று சென்னையில் கமலஹாசனை சந்தித்து, மக்கள் நீதிமய்யம் கட்சியில் சேர்ந்தார். எடப்பாடி பழனிசாமி அரசை கடுமையாக விமர்சிக்கும் கமல் கட்சியில் சேர்ந்து விட்டதால், பாரத்நெட் ஊழல் பற்றிய தகவலை சந்தோஷ்பாபு வெளியிட வாய்ப்புள்ளது.
பாரத் நெட் ஊழல் குற்றச்சாட்டு விவரம் வருமாறு... தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்குவதற்கான 1815 கோடி ரூபாய் மதிப்புடைய பாரத்நெட் திட்டத்திற்கு 8 மாதங்களுக்கு முன்பு டெண்டர் கோரப்பட்டது. ஸ்டெர்லைட் தொடர்பான ஒரு குறிப்பிட்ட கம்பெனியிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு அந்த கம்பெனிக்கு முறைகேடாக டெண்டரை அளிக்க எடப்பாடி பழனிசாமி அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, அறப்போர் இயக்கம் என்ற ஊழல் எதிர்ப்பு இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், அந்த டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த சமயத்தில், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு “விருப்ப ஓய்வில்” செல்வதாக விண்ணப்பித்தார். அவரை வெளியே விட்டால் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டுவார் என்று கருதினார்களோ, என்னவோ! அவரை விலக விடவில்லை.
அவரை தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பதவியிலிருந்து மாற்றினார்கள். தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுனத்தின் (டான்பிநெட்) நிர்வாக இயக்குநராக இருந்தவரும் மாற்றப்பட்டு - அந்த இடத்தில் அமைச்சர் தங்கமணியின் சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்ட வருவாய் அதிகாரியாக (டி.ஆர்.ஓ) இருந்து – பிறகு நவம்பர் 2019-ல் ஐ.ஏ.எஸ். நிலைக்கு உயர்த்தப்பட்ட ஜூனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான டி.ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அந்த சமயத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள், சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் போகிறாரே என்று கேட்டதற்கு, சந்தோஷ்பாபு வேலையில்தான் இருக்கிறார் என்று பதிலளித்தார். ஆனால், ஓரிரு மாதத்திற்குள் சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்கப்பட்டார். பாரத்நெட் ஊழலில் ஈடுபட்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.