சமஸ்கிருத செய்திகளுக்கு தடைகோரி வழக்கு: மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

by Balaji, Dec 1, 2020, 12:07 PM IST

பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக் கோரிய ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார். இதை மனுவாக தாக்கல் செய்யுமாறு அவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனில் தமிழ் சேனல் பொதிகை என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பொதிகை சேனலில் சமஸ்கிருத மொழிமொழியில் செய்தியறிக்கை ஒளிபரப்ப வேண்டும் என்பதற்காக தினமும் 15 நிமிடம் ஒதுக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தமிழகத்தில் சமஸ்கிருதத்தை, திணிக்கும் முயற்சியில் இதுவும் ஒருவகை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இதுகுறித்து ஒரு முறையீட்டை முன்வைத்தார். பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் 15 நிமிடங்களை வாராந்திர செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டுமெனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்ட பொதிகை தொலைக்காட்சியில் இதுவரை வேறுமொழிச் செய்திகள் எதுவும் இடம் பெற்றதில்லை. இந்த நிலையில் தமிழர்களின் பண்பாட்டிற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத சமஸ்கிருத செய்தியறிக்கை அளிப்பதை ஏற்கமுடியாது. ஆகவே, சமஸ்கிருத செய்தி அறிக்கை, சமஸ்கிருத வாராந்திர செய்தித்தொகுப்பு குறித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதைக்கேட்ட நீதிபதிகள் அவசர வழக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை நடத்த தயார் என்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விரைவில்செய்ய இருப்பதாக என வழக்கறிஞர் கண்ணன் தெரிவித்துள்ளார் .

More India News


அண்மைய செய்திகள்