தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை புதிய நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. முன்னதாக நடிகர் விஷால் சங்கத் தலைவராக இருந்து வந்தார், அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் தலைமையிலான நிர்வாக குழுவை அரசு கலைத்துவிட்டுத் தனி அதிகாரியை நியமித்தது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையில் சங்கத்துக்குப் புதிதாகத் தேர்தல் நடத்த ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்து டிசம்பருக்குள் தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் 22ம் தேதி தேர்தல் நடந்தது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தி வைத்தார்.2021-22ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில் என்.முரளி ராமநாராயணன் தலைவராக வெற்றி பெற்றார். துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர், 21 செயற் குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சங்க நிர்வாகிகளுக்கு வெற்றி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நாளை 2ம் தேதி காலை 10.30 மணிக்குச் சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடக்கிறது. அதில் பங்கேற்கும் தமிழக செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வெற்றி சான்றிதழ் வழங்குகிறார்.தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடப்பதற்கு முன்பாக பல தயாரிப்பாளர்கள் அச்சங்கத்திலிருந்து விலகிச் சென்று தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கினார்கள். அதற்கு பாரதிராஜா தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குத் தேர்தல் நடந்ததை வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன். தயாரிப்பாளர்கள் இணைந்து ஓட்டளித்ததில் மகிழ்ச்சி. எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம். அப்போதுதான் உள்ளவர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற முடியும்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொருத்தவரை நிறையச் சவால்கள் முன் நிற்கின்றன. இடைப்பட்ட காலங்களில் முடங்கிப் போன நிர்வாகம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்பட வேண்டும். எனவே, தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக் கூடாது. தீவிர செயலாற்ற வேண்டும்.
முரளி இராம நாராயணன் அவர்களின் தலைமைக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். என்ன வாக்குறுதிகள் சொல்லி வந்தீர்களோ அவற்றை நிறைவேற்ற போராடுங்கள். சங்கம் மீண்டும் துளிர்த்தெழட்டும்.
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெற்றி பெற்ற உங்களனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்.
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.