மேன் ஆப் த இயர் ஆனார் வில்லன் நடிகர்.. யாஹூ இணைய தளம் தேர்வு..

by Chandru, Dec 6, 2020, 11:17 AM IST

இந்த 2020ம் ஆண்டில் அதிகபட்சமாக நெட்டில் தேடப்பட்டவர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது யாஹூ இணையதளம். அதில் தற்கொலை செய்துகொண்டு இருந்த இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தான் அதிகம் தேடப்பட்ட நபர்களில் முதலிடம் பிடித்தார். அடுத்த இடத்தை சுஷாந்த்துக்கு போதைமருந்து கொடுத்து அவரை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் தரப்பட்ட சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி பிடித்தார்.கொரோனா ஊரடங்கு காலத்தில் திரையுலகினர் பலர் பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்குக்கு கோடிகளில் நன்கொடை அளித்தனர். பிறகு திரையுலக அமைப்புகளுக்கு நிதி அளித்தனர். ஆனால் நேரடியாக களத்தில் இறங்கி ஒரு நடிகர் லட்சக்கணக்கான பேருக்கு உதவினார். அவர் நடிகர் சோனு சூட். இவர் அனுஷ்கா நடித்த அருந்ததி படத்திலும் சிம்புவின் ஒஸ்தி படத்திலும் வில்லனாக நடித்தார். பிரபுதேவா நடித்த தேவி படத்தில் 2வது நாயகனாக நடித்தார்.

கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்து வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மும்பை மற்றும் பல் வேறு இடங்களில் தவித்தனர். உணவின்றி, வேலை இழந்து அவர்கள் தவித்தநிலையில் சோனு சூட் ஆதரவு கரம் நீட்டினார். சுமார் 7 லட்சம் பேர்களை அவர்களின் சொந்த ஊருக்கு பஸ், விமானம், ரயிலில் அனுப்பி வைத்தார். வெளிநாட்டில் சிக்கி தவித்த மருத்துவ மாணவர்களையும் அவர் மீட்டு இந்தியா அழைத்து வந்தார். இது தவிர விவாசாயி ஒருவர் தனது இரண்டு மகள்களை வைத்து ஏர் உழும் தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்து அந்த விவசாயிக்கு மறுநாளே டிராக்டர் வாங்கி அளித்தார். வடநாட்டில் நீண்ட தூரம் பள்ளிக்கு செல்ல முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திய ஒரு கிராமத்தை சேர்ந்த மொத்த மாணவ, மாணவிகளுக்கும் சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். இப்படி அவர் செய்த உதவிகள் பட்டியல் நீள்கிறது. இன்னமும் உதவிகளை அவர் தொடர்ந்து வருகிறார். நடிகர் சோனு சூட், இந்த ஆண்டின் சிறந்த ஹீரோ என்று யாஹூ தேர்வு செய்து அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் கோவிட் -19 தொற்று நோயின் உச்சத்தில் நிவாரண முயற்சிகளுக்கு அவர் செய்த சிறந்த பங்களிப்புக்காக வலைதளத்தின் ஆண்டு இறுதி சிறப்புப் பட்டியலில் அவர் பட்டியலிடப்பட்டார். 2020 ஆம் ஆண்டில் சோனு சூட்டின் தாராள உதவி நடவடிக்கைகளை அடிக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதில் யாஹூ கூறும் போது, கோவிட் 19 ஊரடங்கின்போது வீட்டிற்கு திரும்பிச் செல்ல சிரமப்பட்டுக்கொண்டிருந்த 7 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்டிருக்கிறார். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை மற்றும் கல்வியை வழங்கினார். சோனு சூட் மனித குலத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தினார் என்று தெரிவித்திருக்கிறது. இதுபற்றி கருத்து தெரிவித்த சோனு சூட், எனக்கு வழங்கப்பட்ட கவுரவத்தை ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் நிறைய மைல்கள் நான் செல்ல வேண்டியிருக்கிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.

More Cinema News


அண்மைய செய்திகள்