கொரோனா காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி 275 நாட்களுக்குப் பின்னர் வெளியே வந்தார். அவர் கொச்சியில் ஒரு டீக்கடையில் பிளாக் டீ குடிக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி 'பிரீஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் முடிவடைந்தது. மார்ச் கடைசி வாரத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் மார்ச் 5ம் தேதி மம்மூட்டி கொச்சியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார்.
இதன்பிறகு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுன் அமலானது. இதன்பிறகு மம்மூட்டி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கொரோனா பரவல் குறைந்த பின்னர் சமீபத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மம்முட்டிக்கு அழைப்பு வந்தது. ஆனால் அதில் கலந்துகொள்ள அவர் மறுத்துவிட்டார். தவிர்க்க முடியாத சில நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று சில புத்தக வெளியீட்டு விழாவை தன்னுடைய வீட்டில் வைத்தே அவர் நடத்தினார். கொரோனா பரவல் குறைந்த பின்னர் நடிகர் மோகன்லால் கூட திரிஷ்யம் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். ஆனால் அப்போதும் கூட மம்மூட்டி படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இந்நிலையில் 275 நாட்களுக்குப் பின்னர் மம்மூட்டி நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே வந்தார்.
தன்னுடைய காரில் கொச்சி நகரை சுற்றிபடித்த அவர், கலூர் என்ற இடத்தில் ஒரு டீக்கடையில் நண்பர்களுடன் சேர்ந்து பிளாக் டீ குடித்தார். மம்மூட்டி பிளாக் டீ குடிக்கும் அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 275 நாட்கள் எப்படி வீட்டுக்குள் இருந்து பொழுதைப் போக்கினீர்கள் என்று கேட்டபோது, புத்தகங்கள் படித்தும், ஏராளமான சினிமாக்களைப் பார்த்தும் பொழுதைப் போக்கினேன் என்று அவர் கூறினார். வரும் 10ம் தேதி கொச்சியில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த தேர்தலில் ஓட்டுபோட தீர்மானித்துள்ளதாக கூறிய மம்மூட்டி, ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போவதாகவும் கூறினார்.