கொரோனா பாதித்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல டிவி நடிகை திவ்யா பட்னகர் (34) சிகிச்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தீவிரம் இன்னும் குறையவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதித்து மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இந்தி டிவி நடிகை மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையைச் சேர்ந்தவர் திவ்யா பட்னகர். பிரபல இந்தி டிவி தொடர் நடிகையான இவருக்கு கடந்த மாதம் 28ம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருக்கும் போது இவருக்கு நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டது. இதனால் திவ்யாவின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் கடந்த இரு தினங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை அவர் மரணமடைந்தார். இந்த தகவலை அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
திவ்யா பட்னாகர் ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பாகி வரும், 'யே ரிஸ்தா கெஹ்லாத்தா ஹா' என்ற தொடர் மூலம் பிரபலம் அடைந்தார். இந்த தொடரில் இவர் குலோபோ என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது இந்த கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. 2009 முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளது. இந்த தொடர் தவிர, உடான், ஜீத் கெய் தோ பியா மோரே மற்றும் விஷ் உட்பட ஏராளமான டிவி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். இவரது மரணத்திற்கு இந்தி டிவி பிரபலங்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.