கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதுமே கடந்த 7 மாதங்களாக கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. பல படங்கள் ஒடிடி தளங்களில் வெளியானது. சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், மிஸ் இந்தியா, வரலட்சுமி நடித்த டேனி, யோகி பாபு நடித்த காக்டெயில். இந்தியில் அமிதாப் நடித்த குலாபோ சிதாபோ, அக்ஷய்குமார் நடித்த லக்ஷ்மி போன்ற பல படங்கள் ஒடிடியில் வெளியாகின.
சூரரைப்போற்று. பொன்மகள் வந்தாள் படங்கள் ஒடிடியில் ரிலீஸ் செய்ததற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பட நிறுவனங்கள் தயாரிக்கும் அடுத்த படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என்று அறிவித்தனர். அதையெல்லாம் மீறி இப்படங்கள் ஒ டி டி யில் வெளியானது.
கொரோனா ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க அனுமதி கோரப்பட்டது. மத்திய அரசு கொரோனா விதிமுறைகளுடன் கடந்த அக்டோபர் மாதம் திறக்க அனுமதி வழங்கியது. ஆனாலும் தமிழக அரசு அனுமதிக்கவில்லை. கடந்த நவம்பர் 10ம் தேதிதான் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. சந்தானம் நடித்த பிஸ்கோத் உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸ் ஆகின. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கொரோனா விதிமுறைகள் மற்றும் அச்சம் காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு வருவது குறைவாக உள்ளது. இதனால் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. 100 சதவீத அனுமதி கிடைத்தால் தான் விஜய் நடித்துள்ள மாஸ்டர், தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. சமீபத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க விழாவில் பங்கேற்றுப் பேசிய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சீக்கிரமே தியேட்டர்களில் 100 சதவீத டிக்கெட்டுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
ரசிகர்கள் தியேட்டருக்கு அச்சமில்லாமல் வரவேண்டும் என்பதற்காக நடிகர், நடிகைகள் தியேட்டரில் படம் பார்க்க வேண்டும் என்று திரையுலகில் கோரிக்கை எழுந்துள்ளது. பிஸ்கோத் படம் ரிலீஸ் ஆன போது நடிகர் சந்தானம் தியேட்டருக்கு சென்று ரசிகர்களைச் சந்தித்தார். இந்தி நடிகர் அமீர்கான் மும்பையில் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார். தற்போது பிரபல நடிகை கியாரா அத்வானி தியேட்டருக்கு சென்று நேற்று படம் பார்த்தார். அவர் மட்டுமல்லாமால் தனது குடும்பத்தினர் அனைவரையும் தியேட்டருக்கு அழைத்துச் சென்று, தான் நடித்த புதிய படம் இந்தூ கி ஜவானி என்ற படத்தைத் திரையிட்டு காட்டினார். இப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது.
இதுகுறித்து கியாரா அத்வானி கூறும்போது,கடைசியாக தியேட்டருக்கு வந்துவிட்டோம் பெரிய திரையை ரொம்பவே மிஸ் செய்தோம். இந்தூ கி ஜவானி படத்தை நேற்று இரவு குடுமபத்தினர் அனைவருடனும் பார்த்தேன். சிறந்த சேனிடைஷன் வசதியும் செய்யப்பட்டிருந்தது. உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் உங்களை தியேட்டரில் சந்திக்க இன்னமும் காத்திருக்க முடியாது. நாளை(இன்று)முதல் உங்கள் சந்திக்கிறேன் எனத் தெரிவித்தார்.