நடிகை பிரியாமணி பருத்தி வீரன் படம் மூலம் பிரபலமானார். இதில் அவருக்குத் தேசிய விருது கிடைத்தது. கிராமத்துப் பின்னணியில் அமைந்த இந்த படத்தில்தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். அமீர் இயக்கினார். இப்படத்துக்கு பிறகு பிரியா மணிக்கு கிராமத்துப் பெண் வேடமே நிறைய வந்தது ஆனால் அவர் கமர்ஷியல் ஹீரோயின் எண்ணத்தில் இருந்தார். கிராமத்து பெண் வேடங்களைத் தவிர்த்துவிட்டு நவநாகரீக பெண்ணாகப் பல படங்களில் நடித்தார்.
தெலுங்கு திரையுலகுக்கு சென்று கவர்ச்சி ஹீரோயினாக வலம் வந்தார். 3 வருடங்கள் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பிடித்தவருக்கு இளம் நடிகைகள் வரவால் வாய்ப்பு குறைந்தது. பின்னர் மலையாள, கன்னட படங்களில் கவனம் திருப்பினார். தற்போது இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் கால்பந்தாட்ட படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு மைதான் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
படம் பற்றிய விவரம் வருமாறு:இந்தியாவின் பிரமாண்ட படங்களில் ஒன்றாக, உலகின் மிகப்பெரும் விளையாட்டான ஃபுட்பாலை மையமாக வைத்து உருவாகும் “மைதான்” படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஜனவரி 2021 ல் ஆரம்பமாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு லக்னோ, கொல்கத்தா மற்றும் மும்பை பகுதிகளில் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கபட்ட நிலையில் கோவிட் -19 பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டது. படத்தின் முக்கிய பகுதிகள் அடங்கிய 65% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்டது. மீதியுள்ள பகுதிகளின் இறுதிக் கட்ட படப் பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கி 2021 ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ளது. படத்தில் மிக அதிகமான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் உள்ளது. அதற்கான வேலைகள் ஏற்கனவே லண்டன், கனடா மற்றும் எல் ஏ( லாஸ் ஏஞ்சலீஸ்) பகுதிகளில் நடைபெற்று வருகிறது. VFX பணிகள் நிறைய நேரம் பிடிக்கும் வேலையென்பதால் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படம் திரையரங்குகளில் தஷாரா பண்டி கை கொண்டாட்டமாக 2021 அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது. சையத் அப்துல் ரஹீமின் பிரமிப்பு மிக்க உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட “மைதான்” படம் இந்தியாவில் மிகப் பெரும் பயிற்சியாளராகப் புகழடைந்த, இந்திய ஃபுட்பாலை உலகறியச் செய்த மனிதனின் வாழ்வைச் சொல்கிறது. “பதாய் ஹோ” படப்புகழ் இயக்குநர் ரவீந்திரநாத் ஷர்மா இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய விருது வென்ற நாயகி பிரியாமணி, “பாதாய் ஹோ” படத்தில் மாயாஜாலம் செய்த கஜ்ராஜ் ராவ் மற்றும் பிரபல பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஜீ ஸ்டுடியோஸ் போனி கபூர்,ஆகாஷ் சாவ்லா மற்றும் அருனவா ஜாய் செங்குப்தா இப்படத்தை தயாரிக்கின்றனர். திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர் சய்வின் குவத்ரோஷ் மற்றும் ரிதேஷ் ஷா ஆகியோர். இப்படம் 2021 அக்டோபர் 15 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.