நடிகை பலாத்கார வழக்கு நீதிபதியை மாற்றக் கோரிய கேரள அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

by Nishanth, Dec 15, 2020, 12:51 PM IST

பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்ற நீதிபதியை மாற்றக் கோரி கேரள அரசு தாக்கல் செய்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிக்கு எதிராக கேரள அரசு தெரிவித்துள்ள விமர்சனங்கள் தேவையில்லாதது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து இரவில் கொச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் கடத்தி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அந்த நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த சுனில் குமார் என்பவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த பலாத்காரத்திற்கு பிரபல முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் திலீப்பையும் போலீசார் கைது செய்தனர். நடிகை பலாத்கார வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு முதலில் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், பின்னர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திலும் நடந்து வந்தது. இந்நிலையில் ஒரு பெண் நீதிபதி தலைமையில் தனி நீதிமன்றம் அமைத்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து கடந்த வருடம் ஹனி வர்கீஸ் என்ற பெண் நீதிபதி தலைமையில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இந்த தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. பாதிக்கப்பட்ட நடிகை, சாட்சிகள் மற்றும் நடிகர் திலீப் உட்பட கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் விசாரணை நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சார்பில் புகார் கூறப்பட்டது. தொடர்ந்து, விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அரசுத் தரப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து இரண்டு வாரத்திற்கு விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதியை மாற்ற கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிர்த்து கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி கான்வில்கர் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. நீதிபதிக்கு எதிராக தேவையில்லாத கருத்துக்களை கேரள அரசு தெரிவித்துள்ளது என்றும், இதன் மூலம் நீதிபதியின் மன உறுதி பாதிக்கப்படும் என்றும் டிவிஷன் பெஞ்ச் கருத்து தெரிவித்தது.

You'r reading நடிகை பலாத்கார வழக்கு நீதிபதியை மாற்றக் கோரிய கேரள அரசின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை