ஹீரோக்களில் கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, ஆர்யா போன்றவர்கள் தங்கள் ஏற்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ப தங்களது தோற்றதையும் உடற் தகுதியையும் வரவழைக்க கடுமையான பயிற்சிகள் மேற்கொள்கின்றனர். ஆளவந்தான் படத்துக்காக கமல்ஹாசன் தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக்கி நடித்தார். ஐ படத்துக்காகவும் அந்நியன் படத்துக்காகவும் நடிகர் விக்ரம் தோற்றத்தை ஒல்லியாகவும், சிக்ஸ் பேக் தோற்றத்துக்கும் மாற்றினார். அதேபோல் ஏழாம் அறிவு படத்துக்காக சிக்ஸ்பேக் தோற்றத்துக்கு மாறினார் சூர்யா.
தற்போது நடிகர் ஆர்யா சமீபத்தில் நடித்த சார்பட்டா பரம்பரை படத்துக்காக பாக்ஸர் போல் உடற்கட்டை மாற்றிக்கொண்டார். அதேபோல் சில நடிகைகளும் இதுபோல் கதாபாத்திரங்களுக்காக தங்களது தகுதியை வளர்த்துக்கொள்கின்றனர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா 100 கிலோ வெயிட்போட்டு நடித்தார். தலைவி படத்துக்காக கங்கனா உடலில் வெயிட் போட்டார். அந்த வரிசையில் நடிகை டாப்ஸி ஏற்கும் வேடங்களுக்காக சிரமம் பாராமல் கடுமையான பயிற்சிகள் மேற்கொள்கிறார்.
ராஷ்மி ராக்கெட் என்ற இந்தி படத்தில் தடகள வீராங்கனை பாத்திரம் ஏற்றிருக்கிறார் டாப்ஸி. இதற்காகக் கடந்த 2 மாதமாகவே கடுமையான ஓட்டப்பயிற்சி, ஜிம் பயிற்சி எடுத்து வருகிறார். இதற்காகப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் டாப்ஸிக்கு தினமும் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி அளிக்கிறார். சில வாரங்களுக்கு முன் டாப்ஸி தான் ஒட்டப்பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். பயிற்சியாளரின் உதவியுடன் அவர் செய்யும் கடினமான பயிற்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. கடந்த நவம்பர் மாதம் இப்படத்தின் படப் பிடிப்பு தொடங்கியது படப் பிடிப்பின் 3வது நாள் ஓட்டப் பந்தய வீராங்கனைகளுடன் டாப்ஸி வேகமாக ஓடி வரும் காட்சி படமாக்கப்பட்டது. பாதி தூரம் ஓடி வரும்போது திடீரென்று காலில் ஏற்பட்ட வலி பொறுக்காமல் டாப்ஸி ஓடுவதை நிறுத்திவிட்டு நடந்து வந்து ஓய்வு எடுத்தார். அதுபற்றி கூறிய அவர், 3வது நாள் ஷூட்டிங்கில் காலில் வலி அதிகரித்தது. ஓட முடியாமல் டிராக்கில் நின்றுவிட்டு மெதுவாக நடந்து வந்து கொஞ்ச நேரம் மூச்சிறைப்பை கட்டுப்படுத்திக்கொண்டேன் என்றார். அந்த வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
டாப்ஸி கவர்ச்சியை நம்புவதை விட கதாபாத்திரங்களை நம்புவதால் அவரால் பாலிவுட்டில் தாக்குப் பிடிக்க முடிகிறது. பிங்க், படலா போன்ற படங்கள் அவரது திறமைக்குச் சான்றாக அமைந்தது. அடுத்து அவர் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணித் தலைவர் மிதாலி ராஜ் வேடத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சாண்ட் கி ஆங்க் என்ற படத்தில் பிரகாஷி டோமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்காக டாப்ஸி துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றார். சந்த்ரோ டோமர். பிகாஷி டோடர் ஆகிய இரண்டு பெண்களின் வாழ்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி தற்போது தமிழில் ஜன கன மண என்ற படத்தில் நடிக்கிறார். வருடத்து ஒரு படமாவது தென்னிந்தியப் படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்திருக்கிறாராம்.