தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர்கள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி. கடந்த செப்டம்பர் மாத வாக்கில் பெங்களுரில் போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். அப்போது இந்த விஷயத்தில் கன்னட திரையுலகினருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் முடக்கி விட்டனர். இதில் போது ராகினி திவேதி பெயரும் சஞ்சனா கல்ரானி பெயரும் வெளியானது. ராகினியை விசாரணைக்கு அழைத்த அதிகாரிகள் பின்னர் அவரை செப்டம்பர் 4ம் தேதி கைது செய்தனர். அவரை தொடர்ந்து சஞ்சனா கல்ராணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி செப்டம்பர் 8ம் தேதி கைது செய்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர். சிறையில் ராகினிக்கும், சஞ்சனாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை பிரித்து வேறு கைதிகள் உள்ள அறையில் அடைத்தனர்.
இதே வழக்கில் நடிகைகளின் நண்பர்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களும் சிறையில் உள்ளனர். சஞ்சனாவும் ராகினியும் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில் மனு செய்தனர். ஆனால் இருவரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் ராகினி திவேதி தன்னை தவறாக இந்த வழக்கில் கைது செய்திருக்கிறார்கள். கீழ் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மறுக்கப்பட்டது. எனவே எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கீழ்கோர்ட்டில் இதுபற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில் நடிகை சஞ்சனா கல்ராணி ஜாமீன் கேட்டு கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அவருக்கு பரிசோதனை செய்யும்படி மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பரிசோதனை செய்ததில் அவருக்கு உடல் நிலை பாதிப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. மாதம் ஒருநாள் வந்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. கைதாகி 3 மாத சிறை வாசத்துக்கு பிறகு அவர் ஜாமீனில் வந்திருக்கிறார். நடிகை சஞ்ஜனாவுக்கு புதிய பட படப்பிடிப்பு இருந்த போதிலும் அவர் ஷூட்டிங் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் சஞ்சனா வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று அவரது வழக்கறிஞர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர். வீட்டில் உடல் நிலை சரியாகாத நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று தெரிகிறது. தனக்கு பின்னால் கைது செய்யப்பட்டு தனக்கு முன்பே ராகினி ஜாமீன் பெற்றதை அறிந்து வருத்தத்தில் இருக்கிறாராம் ராகினி திவேதி.