பிரபல நடிகரின் மேக்கப்மேன் திடீர் மரணம்...!

by Nishanth, Dec 21, 2020, 11:37 AM IST

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியின் மேக்கப்மேனும், உதவியாளருமான ஷாபு புல்பள்ளி கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டுவதற்காக மரத்தில் ஏறிய போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மலையாள சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நிவின் பாலி. கடந்த 2010ல் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்ற படத்தில் இவர் நாயகனாக அறிமுகமானார்.

தட்டத்தின் மறயத்து, நேரம், 1983, பெங்களூர் டேஸ், விக்ரமாதித்தன், பிரேமம், ஆக்ஷன் ஹீரோ பிஜு உள்பட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் நேரம், ரிச்சி உள்படப் படங்களில் இவர் நடித்துள்ளார். நிவின் பாலியின் தொடக்கக் காலத்தில் இருந்து அவரிடம் மேக்கப்மேனாகவும், உதவியாளராகவும் இருந்து வருபவர் ஷாபு புல்பள்ளி (37). இவர் மலையாள சினிமாவில் பிரபல மேக்கப் மேனாக இருக்கும் ஷாஜி புல் பள்ளியின் சகோதரர் ஆவார்.

ஷாபுவின் வீடு கோழிக்கோடு மாவட்டம் புல்பள்ளி என்ற இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இவர் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் மற்றும் விளக்குகளை கட்டுவதற்காக வீட்டுக்கு முன் உள்ள மரத்தில் ஏறினார்.மரத்தின் உச்சியில் ஏறி நட்சத்திரத்தைக் கட்டிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவர் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை மேப்பாடி என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஷாபுவின் திடீர் மரணத்திற்கு மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான், அஜு வர்கீஸ், கீது மோகன்தாஸ் உள்பட பெரும்பாலான நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை