Friday, Feb 26, 2021

கொரோனா வைரஸை கதறவிடும் காமெடி நடிகர்..

by Chandru Dec 21, 2020, 12:49 PM IST

கொரோனா காலகட்ட மென்றதும் திரையுலகினர் அச்சத்தில் ஆழ்ந்தனர். குறிப்பாக நடிகர், நடிகைகள் வெளியில் தலை காட்டாமல் வீட்டிலேயே முடங்கினர். சினியர் நடிகர்கள் சிலர் ஷூட்டிங்கிற்கு அரசு அனுமதி கொடுத்தும், தங்களது படப்பிடிப்பை தள்ளிவைத்தனர். அதேபோல் தியேட்டரில் படங்கள் ரிலீஸ் செய்ய அனுமதி அளித்தும் தங்கள் படங்களை ஒடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். இன்னும் சில படங்கள் ரிலீஸ் செய்யாமல் முடக்கி வைத்திருக்கின்றனர். ஆனால் ஒரு நடிகர் துணிந்து களத்தில் இறங்கினார். அவர் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக வலம் வந்துக் கொண்டிருக்கும் சந்தானம். கொரோனா காலகட்டத்தில் இறந்த தனது நண்பர் சேது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் அவரது உடலையும் தோளில் சுமந்து சென்றார். அதேபோல் சேது உயிரோடு இருந்தபோது கட்டிய மருத்துவமனையை பின்னர் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

இதற்கும் மேலாக தியேட்டர்கள் திறக்க அனுமதி அளித்தபோது பலரும் படங்களை ரிலீஸ் செய்ய தயக்கம் காட்டிய போதுதான் நடித்த பிஸ்கோத் படத்தை கொரோனா ஊரடங்கு தளர்வில் ரிலீஸ் செய்தார். அத்துடன் நேரடியாக தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களையும் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி கொரோனா பயத்தை போக்கினார். தற்போது படப்பிடிப்பிலும் சந்தானம் தொடர்ந்து கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது அவர் நடிக்கும் புதிய படம் தொடக்கவிழா நடந்துள்ளது. ஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

முதன்முறையாக சந்தானம் படத்தில் சாம் சி.எஸ். இசையமைத்து கைகோத்துள்ளார். திரைப்படத்தை மாதவன் எடிட்டிட் செய்கிறார். நடிகர் சந்தானம் 'பாரிஸ் ஜெயராஜ்' என்ற படத்தில் நடித்து முடித்த கையோடு இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பில் கும்பகோணத்தில் இணைந்துள்ளார். கும்பகோணத்தைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அறிமுக இயக்குனராக இணைந்துள்ளார் ஸ்ரீனிவாசராவ். இவர், 'வல்லினம்' படத்தின் இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர். நிறைய விளம்பரப் படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இப்படத்தைப் பற்றி ஸ்ரீனிவாசராவ் கூறுகையில், "இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவும் பொருந்தியுள்ளது.

காமெடி கதைக்களம் என்றாலும் கூட தந்தை - மகன் இடையே நடைபெறும் காட்சிகள் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு தந்தை - மகனையும் உணர்வுப்பூர்வமாக பிணைத்துவைக்கும். ஒரு தந்தைக்கும் - மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்து வந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப்போக முடியும். மேலும், அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனரஞ்சகமான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதால் ஏ, பி, சி என எல்லா சென்டர்களிலும் படம் நல்ல வரவேற்பைப் பெறுமென்பதில் ஐயமில்லை.

காமெடி, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மட்டுமல்லாமல் இதுவரை ஏற்றிராத புதிய வேடத்தில் மற்றொரு அழகிய பரிணாமத்தில் நடிக்கிறார்.இது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பாராட்டு பெறும் மற்றும் இன்றைய அரசியல் அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் பல சுவாரஸ்யமான, ஜனரஞ்சகமான காட்சிகளுடன் இப்படம் உருவாக்கப்படுகிறது. ஹீரோயினாக புதுமுகத்தை அறிமுகம் செய்கிறோம். மேலும், படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. கும்பகோணத்தைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் படப்பிடிப்பு நடை பெறும். அரசாங்கம் வழிகாட்டுதலின்படி கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியே படப்பிடிப்பு நடைபெறுகிறது" என்றார்.

You'r reading கொரோனா வைரஸை கதறவிடும் காமெடி நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

READ MORE ABOUT :

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை