நடிகையிடம் சில்மிஷம் கைதான 2 வாலிபர்களும் சிறையில் அடைப்பு நடிகை மன்னித்தும் பலனில்லை

by Nishanth, Dec 21, 2020, 19:56 PM IST

வணிக வளாகத்தில் வைத்து நடிகையிடம் சில்மிஷம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு வாலிபர்களும் 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகை மன்னிப்பு அளித்த போதிலும் வழக்கை வாபஸ் பெற முடியாது என்று போலீஸ் கூறியதால் இருவரும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் கொச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து பிரபல மலையாள நடிகையான அன்னா பென்னிடம் 2 வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நடிகையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது ஆதில் (24) மற்றும் இர்ஷாத் (24) என தெரியவந்தது. இவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இருவரும் தலைமறைவானார்கள். நடந்த சம்பவத்திற்கு தாங்கள் இருவரும் நடிகை மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்பதாகவும், விரைவில் போலீசில் சரணடைய இருப்பதாகவும் அவர்கள் கூறினர். ஆனால் சரணடைவதற்கு முன்பாகவே போலீசார் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

இந்நிலையில் இருவரது மன்னிப்பையும் தான் ஏற்றுக் கொண்டதாகவும், அவர்களை மன்னிக்க தயார் என்றும் நடிகை கூறினார். ஆனால் நடிகையின் தாயிடமிருந்து புகாரை வாங்கி வழக்கு பதிவு செய்திருப்பதால் மன்னிப்பு கொடுத்த காரணத்திற்காக வழக்கை ரத்து செய்ய முடியாது என்று போலீசார் கூறினர். இந்நிலையில் விசாரணைக்குப் பின்னர் இன்று மாலை ஆதில் மற்றும் இர்ஷாத் இருவரையும் போலீசார் எர்ணாகுளம் களமசேரி குற்றவியல் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து இருவரையும் 14 நாட்கள் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

More Cinema News


அண்மைய செய்திகள்