இந்தி செல்லும் ராஷ்மிகா: தாக்கு பிடிப்பாரா?

by Chandru, Dec 24, 2020, 09:42 AM IST

பாலிவுட் என்றாலே வெளியூர் நடிகர், நடிகைகளுக்குச் சற்று பயம் தோன்றி இருக்கிறது.இந்தி வாரிசு நட்சத்திரங்கள் வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து நடிக்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை அவர்களை புறக்கணிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குப் பிறகு பரபரப்பாகப் பேசப்படுகிறது. நடிகை கங்கனா முதல் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வரை பலர் இத்தகைய குற்றச்சாட்டை வைத்திருக்கின்றனர்.

மேலும் தென்னிந்தியப் படங்களில் நடித்துவிட்டு பாலிவுட் செல்லும் நடிகர், நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதும் அரிதாகவே உள்ளது. அசின், காஜல் அகர்வால், தமன்னா, ஜெனிலியா, ரகுல் ப்ரீத் சிங், இலியானா போன்ற நடிகைகளில் தென்னிந்தியப் படங்களில் பிரபலமாக இருந்தனர். ஆனால் பாலிவுட் சென்று அவர்களால் தங்களுக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. அசின், ஜெனிலியா திருமணம் செய்துக்கொண்டு இல்லறத்தில் செட்டில் ஆகிவிட்டனர். கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகளை ஏற்காமல் இந்தியில் நடிக்கச் சென்ற கீர்த்தி சுரேஷும் வாய்ப்பு கேன்சல் ஆகித் திரும்பி வந்தார்.

தற்போது மற்றொரு பிரபல நடிகை இந்திக்குச் செல்கிறார். விஜய் தேவர கொண்டாவுடன் டியர் காம்ரேட், கீதா கோவிந்தம், மகேஷ்பாபுடன் சரிலேறு நீக்கெவரு படங்களில் நடித்தவர் ராஷ்மிகா மன்தன்னா. இவர் சுல்தான் படம் மூலம் கார்த்தி ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் இந்தியில் மிஷன் மஞ்சு என்ற படம் மூலம் அறிமுகமாகிறார் ராஷ்மிகா. இதில் ஹீரோவாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். அவர் ரா உளவுத் துறை ஏஜெண்டாக நடிக்கிறார். பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த மிகத் துணிச்சலான ஒரு உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தியில் நடிப்பது பற்றி ராஷ்மிகா கூறும்போது, மிஷன் மஞ்சு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இப்படத்தின் ஸ்கிரிப்ட் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது என்றார்.
இந்திக்குச் சென்ற பல தென்னிந்திய நடிகைகள் சுவற்றில் அடித்த பந்துபோல் மீண்டும் தென்னிந்திய படங்களுக்கே திரும்பிய நிலையில் ராஷ்மிகா அங்குச் சாதிப்பாரா என்பது போகப்போகத் தெரியும்.ராஷ்மிகா தற்போது சுல்தான், பொகரு, புஷ்பா, ஆடால்லூ மீக்கு ஜொஹார்லு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்