ரஜினிகாந்த் சமீபத்தில் தனது 70வது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடினார். அதற்கு முன்னதாக விரைவில் அரசியல் கட்சி தொடங்குவேன், கட்சி தொடங்கும் தேதியை வரும் 31ம் தேதி அறிவிப்பேன். ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன் என்றும் அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து கொண்டாட்டம் போட்டு இனிப்பு வழங்கினார்கள். சென்ற 13ம் தேதி ரஜினிகாந்த் அண்ணாத்த படப்படிப்புக்காக ஐதராபாத்துக்கு தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார். அங்கு படப்பிடிப்பில் தினமும் 14 மணி நேரம் கலந்து கொண்டு நடித்தார். திடீரென்று படப்பிடிப்பில் பங்கேற்றவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். இந்நிலையில் ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டது.
உனடியாக அவரை ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில் அது நெகடிவ் ஆனது. இதையடுத்து ரத்த அழுத்தம் சீராக சிகிச்சை அளிக்கப்பட்டது 3 நாட்களுகு பிறகு ரஜினி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி நேற்று சென்னை திரும்பினார். அவரை ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும், கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழலில் பணியாற்றக்கூடாது போன்ற அறிவுரைகளை டாக்டர்கள் வழங்கி உள்ளார். ஆனால் ரஜினி தரப்பில் கூறும் போது திட்டமிட்டபடி தனி கட்சி தொடங்குவது பற்றி 31ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தை இயக்கிய இயக்குனர் பேரரசு ரஜினிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கட்சி தொடங்குவதுபற்றி மறுபரீசிலனை செய்ய வேண்டும் என சூப்பர் ஸ்டாருக்கு மின்மினிப் பூச்சியின் கடிதம் என்ற தலைப்பில் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
நீங்கள் அரசியலுக்கு
வரவேண்டும் என்று ஆசைப்பட்டோம்!
இன்று அந்த ஆசையை
ஆலோசிக்கிறோம்!
நீங்கள் ஆன்மீக அரசியல்
என்கிறீர்கள்!
தமிழ்நாட்டில்
அரசியல் அஸ்திவாரமே
இறை இழிவுதான்!
எளிமையான நேர்மையான
அரசியல் காமராஜரோடு
சமாதியாகிவிட்டது!
நீங்கள் தமிழக விசுவாசத்தில்
சேவை செய்ய
ஆசைப்படுகிறீர்கள்
இங்கு தமிழ்மொழி வேஷந்தான் போற்றப்படுகிறது!
நீங்கள் யார்மனதும் புண்படாமல் பேசுபவர்!
ஆனால் இங்கே விமர்சனம்
என்ற பெயரில் உங்கள் மனசு
குத்திக் கிழிக்கிப்படுகிறது!
நல்லவர்கள்
அரசியலுக்கு வரவேண்டும்
என்று நினைத்தோம்!
அரசியலுக்கு வந்து நல்லவர் அசிங்கப்படக்கூடாது
என்று இன்று நினைக்கிறோம்!
ஒருசில கட்சிக்கு சில கட்சிகளே எதிர்ப்பாய் இருக்கும், இங்கு உங்களுக்கு
ஒட்டுமொத்த கட்சிகளும்
எதிரியாக கிளம்பிவிட்டது!
இதுவே நீங்கள் அரசியலில்
வெற்றியடைந்ததற்கு அடையாளம்!
கட்சி ஆரம்பிக்காமலே
கோடானகோடி தமிழர்கள்
உங்களை தலைவராக ஏற்று
'தலைவா' என்று
அழைக்கப்பட்டீர்
அதுவே எங்களுக்குப் போதும்!
இப்பொழுது இங்கு
நல்ல அரசியல்வாதிதான் தேவை! நல்ல மனிதரல்ல!
நீங்கள் மனிதனை மனிதனாக மதிக்கும் நல்ல மனிதர்!
ரசிகர்களின் விருப்பத்தைவிட,
சிலரின் ஆசையைவிட
உங்களின் நிம்மதியும்,
உடல்நலமும் முக்கியம்!
அரசியல் ஒரு சூழ்ச்சி சுழல்
இறங்குவதற்கு முன்
சிந்தியுங்கள்! இவ்வாறு பேரரசு கூறி உள்ளார்.