உலகைப் பிடித்து ஆட்டிப் படைத்த 2020ம் கொரோனா தொற்று பரவல் ஆண்டு முடிவுக்கு வருகிறது. 2021ம் ஆண்டு நல்ல ஆண்டாக அமையப் பலரும் வாழ்த்து பகிர்ந்து வந்தாலும் இங்கிலாந்தில் பரவி வரும் புதுவகை கொரோனா மீண்டும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 2020 ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் பாதிப்புக்குள்ளாகி கோடிகளில் மக்கள் மரணம் அடைந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மக்களைப் பொருளாதார ரீதியாகவும் பாதித்துவிட்டது. லட்சக் கணக்கில் மக்கள் உயிரிழந்தனர்.
ஊரடங்கு மக்களை 8 மாதமாக வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தது. பல லட்சம் பேர் வேலை இழந்தனர். திரையுலகமும் 8 மாதமாக முடங்கியது. தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் இன்னமும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை. பல நட்சத்திரங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அமிதாப்பச்சன், அபிஷேக் பிச்சன், சரத்குமார், விஷால், கருணாஸ், டாக்டர் ராஜசேகர், நடிகைகள் தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யாராய், ஜீவிதா, ஐஸ்வர்யா அர்ஜூன், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி போன்றவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர்.
படப்பிடிப்பு தளங்களிலும் கொரோனா வைரஸ் பரவியது. ரஜினிகாந்த நடித்த அண்ணாத்த படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் தொடங்கியது. சில நாள் படப்பிடிப்பு நடந்த நிலையில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. படப் பிடிப்பிலிருந்து பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ரஜினிகாந்த்துக்கு ரத்த அழுத்தம் மாறுபாடு ஏற்பட்டது. அவர் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 3 நாள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகடிவ் என்று தெரிந்தது. ஆனாலும் அவருக்கு டாக்டர்கள் குழு கவனமுடன் இருக்க அறிவுரை வழங்கி உள்ளனர். கொரோனா பரவும் சூழலில் பணியாற்றக் கூடாது. ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும் போன்ற கட்டுப் பாடுகள் அறிவித்தனர். இதையடுத்து சென்னை திரும்பிய அவர் வீட்டில் ஓய்வில் இருப்பதுடன் தான் தொடங்குவதாக அறிவித்திருந்த அரசியல் கட்சியையும் தொடங்கவில்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று அறிவித்திருக்கிறார்.
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அவரே அறிவித்தது தான் தனிமைப்படுத்தலில் இருக்கும் தகவலையும் சிகிச்சை மற்றும் உணவு முறை போன்ற தகவல்களை வீடியோவில் பகிர்ந்தார். தற்போது அவர் வெளியிட்டுள்ள மெசேஜில் தனக்கு கொரோனா தொற்று குணமாகி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அவர் கூறும் போது,கொரோனா பரிசோதனையில் எனக்கு நெகடிவ் என முடிவு வந்திருப்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது நான் முற்றிலுமாக நலமாகி இருப்பதை உணர்கிறேன். நான் குணம் அடைய வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றி. 2021ம் ஆண்டை நல்ல ஆரோக்கியத்துடன் கொண்டாடுவதற்கு காத்திருக்கிறேன். எல்லோரும் பொறுப்புடன் இருக்க வேண்டும் முககவசம் மற்றும் எல்லா பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.