மலையாள சினிமா பாடலாசிரியரின் மரணத்தில் மர்மம் மனைவி புகார் போலீஸ் வழக்கு

by Nishanth, Jan 4, 2021, 12:13 PM IST

நேற்று இரவு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் திடீர் மரணமடைந்த மலையாள சினிமா பாடலாசிரியர் அனில் பனச்சூரானின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் அனில் பனச்சூரான் (55). கல்லூரியில் படிக்கும் போதே கவிதைகள் எழுதி வந்த இவர், மகள்க்கு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா பாடலாசிரியராக அறிமுகமானார். இதன்பின்னர் அரபிக்கதா, கத பறயும்போள், வெளிபாடின்டே புஸ்தகம் உள்பட ஏராளமான படங்களுக்கு இவர் பாடல்கள் எழுதியுள்ளார். பாடல்கள் எழுதுவது மட்டுமில்லாமல் சினிமாவில் இவர் பாடுவதும் உண்டு.

ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். கடந்த இரு வருடங்களுக்கு முன் நாடு முழுவதும் அனைவரும் பாடி நடனமாடி வந்த ஜிமிக்கி கம்மல் என்ற பாடலை இவர் தான் எழுதினார். இவரது சொந்த ஊர் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் ஆகும். தற்போது இவர் காடு என்ற படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்க திட்டமிட்டிருந்தார். இந்த படத்திற்காக இவர் திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை இவர் காரில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றபோது உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக அவரை முதலில் மாவேலிக்கரையிலும் பின்னர் கருநாகப்பள்ளி என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல் நிலை மோசமானதால் திருவனந்தபுரதிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9.30 மணியளவில் மரணமடைந்தார்.

அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருந்ததாகவும், திடீர் மாரடைப்பால் மரணம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய கணவர் அனில் பனச்சூரானின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறி அவரது மனைவி மாயா காயங்குளம் போலீசில் இன்று புகார் கொடுத்துள்ளார். ஒரு நாள் முன்பு தான் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவரது திடீர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து காயங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து பாடலாசிரியர் அனில் பனச்சூரானின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

More Cinema News


அண்மைய செய்திகள்