பிரபல நடிகர், நடிகைகளின் பெயர்களில் இணைய தளங்களில் போலி கணக்குகள் அதிகரித்து வருவதுடன் சிலரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அதிர்ச்சியான தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளை சிலர் ஹேக் செய்தனர். இதுகுறித்து உடனடியாக அவர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகு அந்த கணக்குகளை போராடி மீட்டார். அதே போல் நடிகை பூஜா ஹெக்டே இணையதள கணக்கை முடக்கிய சிலர் அதில் சமந்தாவை பற்றி கிண்டல் செய்து மெசேஜ் பகிர்ந்தனர். இதனால் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கும் சமந்தா ரசிகர்களுக்கும் நெட்டில் மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு, தனது கணக்கை யாரோ ஹேக் செய்து சமந்தா பற்றி மெசேஜ் வெளியிட்டதாக பூஜா ஹெக்டே தெரிவித்தார். சில நட்சத்திரங்களின் பெயர்களில் போலி கணக்குகள் நெட்டில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது.
பிரபல நடிகர் அருண் விஜய் பெயரில் போலி கணக்கு இருப்பது பற்றி அவரே எச்சரித்திருக்கிறார். அடுத்தடுத்து ஹிட் படங்களை அளித்து வரும் அருண் விஜய் எனது பெயரில் இணையதளத்தில் சில போலி கணக்குகள் உள்ளன. அதில் யாரோ நான் வெளியிடுவது போல் மெசேஜ் வெளியிடுகின்றனர். அதுகுறித்து ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக் கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். போலியாக நடிகை தேர்வுக்கு அழைப்பு வெளியிட்டுள்ளது பற்றி ஸ்கிரீன் ஷாட்டும் பகிர்ந்துள்ளார் அருண் விஜய், மேலும் இந்த மோசடியிலிருந்து பாதுகாப்பாகவும் விலகி இருக்கவும் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.
அவர் கூறும்போது, போலி எச்சரிக்கை! தவிர்க்கவும் !! பெண்களைக் குறிவைத்து எனது பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் ஒரு போலியாக அழைப்பு வந்துள்ளது. இந்த வகையான ஆன்லைன் மோசடிகள் இப்போதெல்லாம் அதிகரித்துள்ளன, மேலும் அவர்கள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்திருக்கிறார். முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் இதேபோல் நடிகர் விஷ்ணு விஷால் பெயரில் போலியான கணக்கில் நடிகைகள் தேர்வு பற்றி அழைப்பு வந்ததுபர்றி குறிப்பிட்டிருந்தார். அந்த கனக்கின் ஸ்கிரீன் ஷாட்டும் பகிர்ந்திருந்தார் விஷ்ணு விஷால். அருண் விஜய் தற்போது இயக்குனர் அறிவழகனுடன் தனது அடுத்த பட பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆக்ரா மற்றும் டெல்லியின் பிற இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரெஜினா கசாண்ட்ரா ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்டெஃபி படேல் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார், சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.