நடிகைகளில் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. நடிகைகள் ஐஸ்வர்யாராய், தமன்னா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், ஜீவிதா, ரகுல் ப்ரீத் சிங் எனப் பலருக்கு கொரோனா பாசிடிவ் ஆகி இருந்தது. அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். பிறகு அனைவரும் தற்போது படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யாராய் கொரோனா தொற்று குணமாகி மாதக்கணக்கில் படப்பிடிப்பில் பங்கேற்கத் தயங்கினார். இதனால் கொரோனா லாக்டவுன் தளர்வில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்க முடியாமல் கால தாமதம் ஆகி வந்தது.
ஒரு வழியாக 2020 ம் ஆண்டு முடியும் வரை ஐஸ்வர்யாராய் கால்ஷீட் தரவில்லை. இந்த ஜனவரியில் தான் அவர் கால்ஷீட் ஒதுக்கித் தந்தார். அதன்படி ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கில் பங்கேற்று நடித்து வருகிறார். இவரும் சரத்குமாரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. சரத்குமாரும் கொரோனா தொற்றால் கடந்த மாதம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தார். படப் பிடிப்பில் தற்போது கடுமையான கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சேனிடைசர் முககவசம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
படப்பிடிப்பு தளத்திற்குள் வருவதற்கு முன் வெப்ப அளவு ஒவ்வொருவருக்கும் சோதனை செய்து காய்ச்சல் இல்லாத சீரான நிலையில் இருக்கிறார்களா எனப் பரிசோதிக்கப்படுகிறது.முன்னதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நடிகைகள் அதுபற்றி வெளியில் தெரிந்தது ஒப்புக் கொண்டு சிகிச்சை பெற்றனர். ஆனால் நடிகை ரேணு தேசாய் கொரோனா தொற்று ஏற்பட்டதாக வந்த தகவலைக் கண்டு கொந்தளித்து விட்டார். தமிழில் பார்த்திபன் நடித்த ஜேம்ஸ் பாண்டு படத்தில் நடித்தவர் ரேணு தேசாய். தெலுங்கில் பத்ரி, ஜானி படங்களில் நடித்திருக்கிறார். இஷ்க் வாலா லவ் என்ற படத்தை இயக்கியும் உள்ளார். ரேணு தேசாய் டோலிவுட் நடிகர் பவன் கல்யாணை காதலித்து மணந்தார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால் பவனுக்கும் ரேணுவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுக் கடந்த 2012ம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். கடந்த ஆண்டு ரேணு தேசாய் 2வது திருமணம் செய்யவிருப்பதாக தகவல் பரவியது பின்னர் அது வதந்தி என்பது தெரிந்தது.
சில தினங்களுக்கு முன் ரேணு தேசாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக வந்த தகவல் கேட்டு கோபமும், அதிர்ச்சியும் அடைந்தவர் அதற்கு விளக்கம் அளித்தார்.இதுபற்றி ரேணு தேசாய் கூறும்போது.தவறான தகவல்களை அதுவும் கொரோனா பாசிடிவ் என்று எழுதுவது காமெடி அல்ல. கொரோனா தொற்றால் மக்கள் இறக்கிறார்கள். இது காமெடியான விஷயமல்ல. முட்டாள்கள் சிலர் செய்யும் இதுபோன்ற வதந்திகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுத் தள்ளுங்கள் என்று சிலர் என்னிடம் சொல்கிறார்கள். கொரோனா என்பது தீவிரமான விஷயம். இதுபோல் தகவல் என்னைப்பற்றி வரும் போது அதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது. இதுபோன்ற தவறான தகவல்கள் வராமல் மீடியாக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.