கொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி

by Sasitharan, Jan 18, 2021, 20:37 PM IST

மும்பை: தனது வீட்டுக்கு பின்புறம் மண்ணில்லாமல் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறிகளை வளர்த்து நடிகை ஷில்பா ஷெட்டி அனைவரது பார்வையும் தன் பக்கம் இழுத்துள்ளார். யோகா செய்வது மற்றும் யோகா தொடர்பான புத்தகங்கள் வெளியிடுவது என்று எப்போதும் பிஸியாக இருக்கும் ஷில்பா, தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் தனது வீட்டுக்குப் பின்புறம் காய்கறித் தோட்டத்தை உருவாக்கியுள்ளார். இருப்பினும், எல்லோரையும் போல் இல்லாமல், மிகவும் வித்தியாசமான முறையில், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பமான ஹைட்ரோபோனிக் முறையில் தனது தோட்டத்தை ஷில்பா ஷெட்டி அமைத்துள்ளார்.

இது தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி கூறுகையில், மும்பை அந்தேரி சார் பங்களாவில் உள்ள தனது வீட்டில் செடிகளை வளர்த்து வருவதாக தெரிவித்தார். இந்தத் தொழில்நுட்பத்தில் காய்கறிகளை வளர்க்க மண் தேவையில்லை. முழுக்க முழுக்கத் தண்ணீரில் வளர்க்கப்படுகிறது. வீட்டில் வழக்கமான முறையில் காய்கறிகள் வளர்க்கப் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் இந்தப் புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்ததாக தெரிவித்துள்ளார். தனது ஹைட்ரோபோனிக் தோட்டத்தை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஷில்பா ஷெட்டி, சுத்தமான உணவைச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபோது எனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள சிறிய இடத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறி விளைவிக்கும் செயலில் ஈடுபட்டேன்.

தற்போது என்னால் 25 நாள்களில் காய்கறிகளை உற்பத்தி செய்ய முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஹைட்ரோபோனிக் முறையில் எப்படி செடி வளர்க்க வேண்டும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். மண்ணில்லாத விவசாயம் ஹைட்ரோபோனிக் முறை. மண்ணை தவிர்த்து சத்துள்ள தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி தாவரங்களை வளர்க்க முடியும். தாவரங்களுக்கு குறிப்பிட்ட சத்து, கொஞ்சம் தண்ணீர் மற்றும் சூரிய வெளிச்சம் மட்டுமே தேவை என்றும் தெரிவித்துள்ளார். தங்களது வீட்டுத் தோட்டத்தில் ஹைட்ரோபோனிக் முறையில் காய்கறிகளை வளர்க்க பொதுமக்களும் முன் வர வேண்டும் என்றும் ஷில்பா ஷெட்டி வலியுறுத்தியுள்ளார்.

You'r reading கொஞ்சம் தண்ணீர், சூரிய வெளிச்சம் மட்டும் தேவை: ஹைட்ரோபோனிக் முறையில் விவசாயம் செய்யும் ஷில்பா ஷெட்டி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை