வாஷிங்டன்: அமெரிக்க புதிய அதிபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பபடும் காணொலி காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கிய பிரமாண்ட கோலங்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 20-ம் தேதி புதன் கிழமை அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ளார். ஏற்கனவே, அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் போதும் நாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடம் முழுவதுமே பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் முகப்பில், டைல்ஸ்களை பயன்படுத்தி அமெரிக்கவாழ் இந்தியர்கள், பிரமாண்ட கோலங்களை உருவாக்கி உள்ளனர்.
எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றை அங்கு வைக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. எனவே பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பப்படும் காணொலி காட்சியில் இந்த கோலங்கள் காட்சிப்படுத்தப்படும் என விழாவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில், துணை அதிபராக பதவியேற்க இருக்கும் முதல் பெண் என்ற பெருமையை இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.