சிட்னி: இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே கூறிய கருத்துக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, பிரிஸ்பேனில் ஆஸ்திரேயா அணியுடனான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வெற்றிப்பெற நாளை நடைபெறவுள்ள கடைசி ஆட்டத்தில் இந்தியா 328 ரன்களை எடுக்க வேண்டும். இந்த டெஸ்ட் போட்டியின் தொடக்கத்திலேயே முக்கிய பந்துவீச்சாளர்கள் காயமடைந்ததால் நடராஜனும், வாஷிங்டன் சுந்தரும் தங்களுடைய முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினர்.
ஆஸ்திரேலிய தொடரில் நெட் பவுலராக இந்திய வீரர் நடராஜன் சென்று 3 விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி சாதனை படைத்துள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் நடராஜன் வீசிய நோ பால் குறித்து தொலைக்காட்சி நேரலை வர்ணனையில் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் காபா, நடராஜன் இந்த டெஸ்ட் போட்டியில் 7 நோ பால்களை வீசி உள்ளார். அது எல்லாம் மிகப்பெரிய நோ பால்கள். பெரிதான. அந்த நோ பால்களில் 5 அவர் வீசிய ஓவரின் முதல் பந்து.
அவை அனைத்தும் கிரிஸை விட்டு மிகவும் தள்ளி போடப்பட்டது. நாங்கள் அனைவரும் கூட நோ பால் வீசியுள்ளோம். ஆனால், குறிப்பாக ஓவரின் முதல் பந்தை மட்டும் நோ பாலாக வீசுவது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான் என தெரிவித்தார். ஷேன் வார்னின் இந்த கருத்து நடராஜன் ஸ்பாட் ஃபிக்சிங்சில் ஈடுபட்டார் என்பதை குறிப்பது போல் அமைந்தது. அவர் நேரடியாக இதனை சொல்லாமல் மறைமுகமாக கூறியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரசிகர்கள் ஷேன் வார்னவுக்கு சமூக ஊடகங்களில் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.