கோவா பட விழாவில் கோலிவுட் நடிகரின் சமஸ்கிருத படம்..

by Chandru, Jan 20, 2021, 16:14 PM IST

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப் படம் 'நமோ' திரையிடப்படுகிறது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் 'நமோ'. இதில் கோலிவுட்டில் கமலுடன் பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் சுபாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்குக் கதை எழுதி இயக்கியுள்ளார் விஜேஷ் மணி.
விஜேஷ் மணி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்.

இதுவரை, மலையாளத்தில் இரண்டு படங்கள், ஒரு சமஸ்கிருத மொழிப்படம், இருளா மொழியில் ஒரு படம் மற்றும் குரும்பா மொழியில் ஒரு திரைப்படம் என ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய திரைப்படங்களில் எல்லாம் ஏதேனும் ஒரு புதுமையைப் புகுத்தி அதற்காக கின்னஸ் புத்தகம், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியனவற்றில் இடம்பெற்று புகழைச் சேர்த்துக் கொண்டுள்ளார்.விஜேஷ் மணியின் முதல் திரைப்படம் 'விஸ்வகுரு'. இது மலையாளத் திரைப்படம். இத்திரைப்படத்தை மெடிமிக்ஸ் நிறுவன உரிமையாளர் அனூப் தயாரித்தார்.

இத்திரைப்படத்தை விஜேஷ் மணி 51 மணி நேரத்தில் கதை எழுதிப் படப்பிடிப்பு நடத்தி சென்சார் செய்து விளம்பரப்படுத்தினார். இத்திரைப்படம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.அதனைத் தொடர்ந்து 2017ல் 'புழயம்மா' என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தைக் கோகுலம் கோபாலன் தயாரித்தார். இத்திரைப்படம் சிறந்த சுற்றுச் சூழல் விழிப்புணர்வுத் திரைப்படமாக அறியப்பட்டு ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றது. இப்படம் முழுவதுமே ஆற்றிலேயே நடப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது இதன் தனிச் சிறப்பு.மூன்றாவதாக 2018ல் இருளா மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்கினார். 'நேதாஜி' எனப் பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தை ஜானி குருவில்லா தயாரித்தார். இந்தத் திரைப்படம் இந்தியன் பனோராமாவுக்குத் தேர்வானது. கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இதேபோல் 'குரும்பா' என்று யாரும் அறிந்திராத மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சோஹன் ராய் தயாரித்திருக்கிறார். 'ம்ம்ம்' என்பதுதான் இத்திரைப்படத்தின் பெயர். படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் விஜேஷ் மணி. இத்திரைப் படம் ஆஸ்கர் தேர்வுக்கான திரையிடலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் இயக்கியுள்ள சமஸ்கிருத மொழித் திரைப் படம் 'நமோ' கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 22.01.21 அன்று திரையிடப் படுகிறது.

You'r reading கோவா பட விழாவில் கோலிவுட் நடிகரின் சமஸ்கிருத படம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை