ரஜினிகாந்த் நடித்துள்ள `காலா’ திரைப்படம் அடுத்த மாதம் வரை ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு தமிழ் திரைப்படமும் வெளியிடப்படவில்லை. தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழ் புத்தாண்டு அன்று ஒரு திரைப்படமும் வெளியாகமல் இருந்ததும் இந்த ஆண்டுதான்.
இந்த ஸ்டிரைக்கால் பல முக்கியத் திரைப்படங்களின் ரிலீஸ் தேதிகள் தள்ளிப் போய் கொண்டிருக்கின்றன. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள இரண்டு திரைப்படங்களான `காலா’ மற்றும் `2.0’ ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இதில் காலா, இம்மாதம் வெளியாகும் என்று சில மாதங்களுக்கு முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக் காரணமாக காலா-வின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. மேலும், இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று 2.0 ரிலீஸ் ஆகலாம் என்று அப்படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால், காலா-வின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதால் கண்டிப்பாக 2.0 வெளியாகும் தேதியிலும் சிக்கல் வரலாம் என்று கோடாம்பாக்க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.