சமீபகாலமாக இந்திய படங்கள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அதிக பொருட்செலவுகளில் தயாரிக்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் படம் ஆதி புருஷ். இது 3 டி வடிவில் அனிமேஷன் கேப்சரில் தயாரிக்கப்படுகிறது. பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுத் இயக்குகிறார். பிரபாஸ், ஓம் ரவுத் இருவரும் இணைந்து உருவாக்கும் ஆதிபுருஷ் படம் பற்றி கடந்த 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 2020 இல் வெளியிடப்பட்ட போதிலும், படம் இன்று (பிப்ரவரி 2) நடிகர்கள் மற்றும் குழுவினரின் முன்னிலையில் ஷூட்டிங் தொடங்கியது.
ஆதிபுருஷின் டைட்டில் சின்னத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பிரபாஸ் இதனை அறிவித்தார். ஆதிபுருஷ் ஆரம்ப் என்று குறிப்பிடப்பட்டுள்ள அதில் ஆரம்ப் என்ற வார்த்தை படம் ஆரம்பித்ததை குறிப்பிடுகிறது. டி-சீரிஸின் சிஎம்டி பூஷன் குமாரால் தயாரிக்கும் ஆதிபுருஷ் படத்தில் இந்தி நடிகர் சைஃப் அலிகானும் நடிக்கிறார். தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைச் சுற்றியுள்ள இந்திய காவியம் ராமயணத்தை இப்படம் உருவாகிறது. புராணங்களின்படி, ராமர் ஆதி புருஷா என்றும் அழைக்கப்படுகிறார். ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இப்படத்தில் லங்கேஷ் என்ற அரக்கன் ராவணனாக சயீப் அலிகான் நடிக்கிறார்.
ஹீரோயின் கதாபாத்திரத்தைப் பொருத்தவரை, கிரித்தி சனோன் நடிப்பார் என்று தெரிகிறது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்படும். படத்தின் பெரும் தொகை வி.எஃப்.எக்ஸ் தொழில் நுட்பத்துக்கு செலவிடப்படும். பல ஹாலிவுட் படங்களில் செய்யவதுபோல் கிரீன் மேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆதிபுருஷ் முழுவதுமாக படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது. படத்தின் கிராபிக்ஸ் வேலை செய்வதற்காக அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸின் விஎஃப்எக்ஸ் தொழில் நுட்ப மேற்பார்வையாளர்களுடன் தயாரிப்பாளர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். ஆதிபுருஷ் படம் 11.08.2022ம் ஆண்டு வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருக்கிறது.