மாஸ்டர் படம் பொங்கல் முதல் நாள் வெளியானது. அதேபோல் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தினத்தில் வெளியானது. அதனதன் பட்ஜெட்டுக்கு ஏற்ப படங்கள் வெற்றி பெற்று வசூல் செய்தது. குறிப்பாக மாஸ்டர் படம் 200 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து ஒடிடி தளத்துக்கு என்று பேசிக் கொண்டிருந்த படங்கள் தியேட்டர் ரிலீஸுக்கு திரும்பின. வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று 5 படங்கள் ரிலீஸ் ஆகிறது. சமுத்திரக்கனி, மணிகண்டன் நடித்துள்ள ஏலே. ஹலிதா சமீம் இயக்கி உள்ளார். அடுத்த சந்தானம், அனைகா சோட்டி நடிக்கும் பாரீஸ் ஜெயராஜ். இதனை ஜான்சன்கே இயக்கி உள்ளார். வெற்றி திலீபன் நடித்திருக்கும் கேர் ஆப் காதல். இப்படத்தை ஹேமாம்பர் ஜஸ்டி இயக்கி உள்ளார்.
இதுதவிர விஜய் சேதுபதி, அமலா பால் போன்றவர்கள் நடித்துள்ள 4 கதைகள் கொண்ட ஆந்தலஜி படம் குட்டி டோரி. இதனை கவுதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இதுதவிர இந்த பட்டியலில் புதிதாக காதலர் தின ரிலீஸாக இணைந்திருக்கிறது ''பழகிய நாட்கள்''. இதில் புதுமுகம் மீரான், மேக்னா இயக்குனர் ஸ்ரீநாத்,சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ், நெல்லை சிவா, வின்சன்ட்ராய், சிவக்குமார் மற்றும் சுஜாதா நடித்திருக்கின்றனர். மணிவண்ணனும், விஜய குமாரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கபிலன் மற்றும் ராம்தேவ் வரிகளுக்கு ஜான் ஏ அலெக்ஸ், ஷேக் மீரா, லண்டன் ரூபேஷ் இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் ஐந்து பாடல்களுமே ஹிட்டாகி வருகிறது.
படம் பற்றி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ராம்தேவ் கூறியதாவது: வெகு நாட்களுக்கு பிறகு 100% காதல் கதையாக பழகிய நாட்கள் காதலர் தினம் முன்னிட்டு திரைக்கு வருவது ஒரு சிறப்பாக நினைக்கிறேன். இப்படம் காதலித்தவர்கள் காதலிப்பவர்கள் காதல் செய்யப்போகிறவர்கள் என்று அனைத்துத்தரப்பினருக்கும் பிடித்த படமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. வெகு நாட்களாக பிரிந்திருந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்றுசேரும் இத்தருணத்தில் இப்படம் ரிலீஸ் ஆவதால் அவர்களுக்கான புத்துணர்ச்சி படமாக இது அமையும். இப்படத்தை அவர்கள் பெற்றோர்களே பார்க்கச் சொல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் பாடிய பாடலுக்கு அவரே மாஸாக டான்ஸ் ஆடி உள்ளார். இப்பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் என்று ராம்தேவ் கூறினார்.