பிரபு தேவா டான்ஸ் மாஸ்டராக இருந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி புகழ் பெற்ற பின்னர் படங்களில் ஹீரோவாக உயர்ந்தார். ரப்பர்போல் வளைந்து ஆடும் அவரை தென்னிந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். அவர் நடிக்கும் படங்களில் அவரது ஒரு நடனமாவது ஸ்டைலாக உருவாகிப் பிரபலமாகிவிடும். நடன இயக்குனராக இருந்தாலும் தான் நடிக்கும் படத்தில் வேறு நடன மாஸ்டர்கள் நடனப் பயிற்சிக்கு ஆடுகிறார்.சார்லி சாப்ளின் 2 திரைப் படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது அனைவரும் அறிந்ததே.
உற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொரு முறை கைகோர்த்திருக்கிறார்.அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது. மஞ்ச பை புகழ் என்.ராகவன் இயக்கும் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்த பாடல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து பேசிய ஸ்ரீதர், “பிரபுதேவாவுடன் பணி புரிவது எப்போதுமே ஒரு உற்சாக அனுபவம். சின்ன மச்சான் பாடலின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அவருடன் பணியாற்றியுள்ளேன். இது ஒரு ஸ்டைலிஷ் வெஸ்டர்ன் பாடல். மிகவும் நன்றாக வந்துள்ளது. பிரபுதேவா, இயக்குநர் உட்பட அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,” என்றார்.