மோகன்லால், மீனா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரிஷ்யம் 2 படத்தை ஓடிடியில் வெளியிட்டால் கேரளாவில் உள்ள தியேட்டர்களில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கேரள பிலிம் சேம்பர் எச்சரித்துள்ளது.மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு வெளியாகி மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக ஓடிய படம் திரிஷ்யம். சமீப காலத்தில் மலையாளத்தில் மிக அதிக வசூலை வாரிக் குவித்த படம் இது தான். மலையாளத்தில் மட்டும் இல்லாமல் இந்தப் படம் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியாவில் மட்டுமில்லாமல் சீனா, சிங்களம் உட்பட பல வெளிநாட்டு மொழிகளிலும் இந்தக் கதை படமாக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்குப் பின்னர் இதன் இரண்டாவது பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு திரிஷ்யம் 2 என பெயரிடப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா, சித்திக், ஆஷா சரத், எஸ்தர் அனில், அன்சிபா கான் உள்பட பெரும்பாலான நட்சத்திரங்கள் இந்தப் படத்திலும் நடித்துள்ளனர்.கொரோனா காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வரும் 19ம் தேதி அமேசான் பிரைமில் திரிஷ்யம் 2 வெளியாகும் என்று இதன் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பவூர் அறிவித்தார்.
இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓடிடியில் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று தியேட்டர் உரிமையாளர்களும் கேரள பிலிம் சேம்பர் நிர்வாகிகளும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார். அடுத்ததாக மோகன்லாலை வைத்து பெரும் பொருட்செலவில் குஞ்சாலி மரைக்கார் என்ற படத்தை தயாரிப்பதால் உடனடியாக பணம் தேவைப்படுவதால் திரிஷ்யம் 2 படத்தை ஓடிடியில் வெளியிடுவதை தவிர வேறு வழியில்லை என்றும், சில நாட்களுக்குப் பின்னர் தியேட்டர்களில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் இதற்கு பிலிம் சேம்பர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓடிடியில் வெளியிட்டால் கேரளாவில் உள்ள தியேட்டர்களில் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.