கேரள மாநிலம் கொச்சியில் இன்று தொடங்கிய கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய விருது பெற்ற நடிகர் சலீம் குமாரை அழைக்காததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வருடந்தோறும் கேரள சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு அடுத்தபடியாக இந்த திரைப்பட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திரைப்பட விழாவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொள்வார்கள்.
கோவா திரைப்பட விழா முடிந்த பின்னர் வருடந்தோறும் டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் தான் இந்த விழா திருவனந்தபுரத்தில் நடத்தப்படும். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாகப் பிப்ரவரி மாதத்திற்கு விழா தள்ளி வைக்கப்பட்டது. மேலும் திருவனந்தபுரத்தில் மட்டுமில்லாமல் எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் தலச்சேரி ஆகிய 4 இடங்களில் இந்த விழா நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் திரைப்பட விழா கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் எர்ணாகுளத்தில் இன்று திரைப்பட விழா தொடங்கியது.
இந்த வருடம் கேரள சர்வதேச திரைப்பட விழாவின் 25வது வருடமாகும். இதையொட்டி 25 பேரை அழைத்து விழாவைத் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. வழக்கமாகத் திரைப்பட விழாவில் தேசிய மற்றும் மாநில விருது பெற்றவர்கள், மூத்த கலைஞர்கள் ஆகியோர்கள் அழைக்கப்படுவார்கள். இதன்படி தேசிய மற்றும் மாநில விருது பெற்ற நடிகர் சலீம் குமார் தனக்கும் அழைப்பு வரும் என காத்திருந்தார். ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதையடுத்து விழா நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு அவர் கேட்ட போது, வயதானவர்களுக்கு விழாவில் அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தான் காங்கிரஸ்காரன் என்பதால் தான் விழாவுக்கு அழைக்க வில்லை என்று நடிகர் சலீம் குமார் குற்றம் சாட்டினார். இது குறித்து அறிந்த கேரள சினிமா அகாடமி தலைவரும், இயக்குனருமான கமல், நடிகர் சலீம் குமாரைத் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டு விழாவில் கலந்து கொள்ள வருமாறு கூறினார். ஆனால் தன்னை அவமதித்ததால் விழாவுக்கு வர முடியாது என்று அவர் கூறிவிட்டார். நடிகர் சலீம் குமாரைப் புறக்கணித்ததற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ஹைபி ஈடன் உட்படப் பலர் விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.