கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தளபதி விஜய் மற்றும் அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோருக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. எஸ்.ஏ. சந்திரசேகர் நடிகர் விஜய் பெயரில் ஒரு அரசியல் கட்சியைப் பதிவு செய்யத் தேர்தல் கமிஷனுக்கு விண்ணப்பித்தார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த விஜய், தனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதில் எனது ரசிகர்கள் யாரும் சேர வேண்டாம். அக்கட்சிக்காக எந்த பணியும் மேற்கொள்ளக் கூடாது, மீறி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தந்தைக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக 2 பேர் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டனர்.
மேலும் ஒரு அறிக்கையில், தனது எழுத்து மற்றும் அனுமதியின்றி தனது பெயரையும் புகழையும் பயன்படுத்துபவர் மீது வழக்குத் தொடுப்பேன் என்றும் விஜய் தெரிவித்திருந்தார்.இதற்கிடையில், தந்தை, மகன் இடையே பேச்சு வார்த்தை இல்லாமல் நின்றது. தனது முடிவில் தலையிடுவதை விஜய் விரும்பாததால் நீண்ட காலமாகத் தந்தையுடன் தொலைப்பேசியில் பேசுவதையும் நிறுத்திவிட்டார். இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர்,விஜய் ஒரு தீய வட்டத்தில் சிக்கி உள்ளதாகவும், விஜய்யை ஒரு நடிகராக வளர்ப்பதற்காகத் தனது வாழ்க்கையை தியாகம் செய்தேன் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
பின்னர் இந்திய தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் எழுதிய எஸ்.ஏ.சந்திரசேகர், கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். விஜய் தன்னிடம் பேசாமலிருப்பதால் மனவருத்தம் அடைந்திருக்கிறார் எஸ்.ஏ.சி. அவர் தற்போது விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளாராம். அந்த கடிதத்தில் விஜய்யிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிகிறது. எஸ்.ஏ.சி விரும்புவது எல்லாம் விஜய்யுடன் பேச வேண்டும் என்பதுதானாம். விஜய்யின் பதிலை எதிர்பார்த்து எஸ்.ஏ.சந்திரசேகர் காத்திருக்கிறார்.நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் மாஸ்டர் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்,. அடுத்து விஜய் நடிக்கும் படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார்.