தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கின் மறைவு திரையுலகத்தை, ரசிகர்களை உலுக்கியுள்ளது. தமிழ்த் திரைப்படங்களின் நகைச்சுவை பாணியை அடுத்த கட்டத்துக்கு எடுத்த ட்ரெண்ட் செட்டர் விவேக். நடிகர் சின்னி ஜெயந்த்தைப் போலவே இவரும் ஆரம்ப காலத்தில் தனது பல குரல் திறமையின் காரணமாக நகைச்சுவையில் தடம்பதித்தார்.
"இன்னைக்குச் செத்தா நாளைக்கு பால்" என்ற வசனம் தான் விவேக்கை ரசிகர்களிடம் பரிட்சியபடுத்தியது. இதன்பின் ஏகப்பட்ட வசனங்கள் ஹிட்டடித்தன. ஆரம்பத்தில் கதைக்கு ஒன்றிய கேரக்டர்களுடன் பயணித்தவர், போக போக நகைச்சுவையினூடாகச் சமூகத்துக்குத் தேவையான முற்போக்கு கருத்துக்களையும் பேசி ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தார். இவரும், செல் முருகனும் இணைந்து, பயனுள்ள பல செய்திகளை நகைச்சுவையின் வழியே தமிழ் சமூகத்திற்கு வழங்கினார்கள். காரில் எலுமிச்சம்பழம் கட்டுவது, தீண்டாமைக் கொடுமை, மண் சோறு சாப்பிடுவது என அனைத்து மூட நம்பிக்கைகளையும் போறபோக்கில் கலாய்த்துத் நகைச்சுவையோடு பேசியதே இவரின் அடையாளமானது. அவ்வப்போது கலாமின் கருத்துக்களையும் திரைப்படங்களில் தெளித்தவர்.
கலாமின் கருத்துக்களை திரைப்படங்களோடு நிறுத்திவிடாமல், களத்திலும் வெளிக்காட்டியவர் விவேக். குறிப்பாக கலாமின் ஆசைகளில் ஒன்றான மரம் நடுவதை இயக்கமாக மாற்றி அதை சீர்பட நடத்தி காட்டிவந்தார். கடைசியாக 1 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு வைத்து பயணித்தார். இதில் 30 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டியவர் 1 கோடி இலக்கை தொட முடியாமல் உயிர் நீத்துள்ளார். அவரின் இழப்பு இயற்கைக்கும் பேரிழப்பு தான்.
திரைத்துறைக்கு மிக விரைவாகவே வந்தவர் விவேக். இதனால் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள விவேக், கமல்ஹாசனோடு இணைந்து நடித்ததில்லை என்று வருத்தம் இருந்தது. 32 ஆண்டுகாலத் திரையுலகப் பயணத்தில், முதன்முதலாக கமலோடு இணைந்து இந்தியன்-2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கடந்த ஆண்டு மகிழ்வோடு அறிவித்திருந்தார் விவேக். ஆனால், அவரது ஆசைப்படி நடித்திருந்தாரா எனத் தெரியவில்லை. அந்தப் படம் தற்போது பிரச்சனையால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு காரணமாக மறைந்திருந்தாலும் டானாக, எமோஷனல் ஏகாம்பரமாக.... இப்படி பல கதாபாத்திரங்களாக நடிகர் விவேக், என்றென்றும் நம்மோடு வாழ்வார்.
சென்று வாருங்கள் விவேக் சார்!