Friday, May 14, 2021

விவேக் மரணத்திற்கு இது தான் காரணம்..!

by Ari Apr 19, 2021, 06:32 AM IST

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் நடிகர் விவேக் உயிரிழந்ததாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கடந்த 15 ஆம் தேதி நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். 16 ஆம் தேதி உடல் சோர்வுடன் இருந்த நடிகர் விவேக், வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியையும் மேற்கொள்ளவில்லை. பின்னர் காலை 11 மணியளவில் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் நடிகர் விவேக் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு 100 சதவீத மாரடைப்பு ஏற்பட்டதால், ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்யப்பட்டு, அடைப்பு நீக்கப்பட்டதாகவும், இதயதுடிப்பு சீராக இருக்க வேண்டும் என்பதற்காக எக்மோ சிகிச்சை மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் விவேக்கிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படவில்லை என விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, இரவில் செய்தியாளரை சந்தித்த மருத்துவர்கள் விவேக்கின் உடல் நிலை மோசமாக இருப்பதால் 24 மணி நேரம் கழித்து தான் எதையும் கூற முடியும் என்று தெரிவித்தனர்.

நடிகர் விவேக்கிற்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி 17 ஆம் தேதி அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் அவர் மரணமடைந்ததாக தகவல் காட்டுத் தீப்போல் பரவியது.

தினமும் சைக்கிளிங், யோகா மூச்சு பயிற்சி, நீச்சல், நடைபயிற்சி 3 மாதங்களுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு உடலை கவனமாக பார்த்துக் கொண்ட நடிகர் விவேக்கிற்கு இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் திடீரென்று 100 சதவீத அடைப்பு ஏற்பட்டது எப்படி என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விவேக்கின் மரணத்தின் மீதான சந்தேகம் மற்றும் குழப்பங்களுக்கு மூல காரணம், சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் மற்றும் ஆரம்பத்தில் மருத்துவர்கள் அளித்த முரண்பட்ட தகவல் தான் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக்கின் உடல் நிலை குறித்து அதிகார பூர்வ தகவலை வெளியிட்ட நிகில் முருகன், விவேக்கிற்கு மயக்கம் ஏற்பட்டு அவரது மகள் மருத்துவமனை அழைத்துச் சென்றதாகவும், எம்.ஆர் ஐ ஸ்கேன் எடுக்கப்படுவதாகவும், விவேக் சுய நினைவுடன் நலமாக இருப்பதாகவும் கூறி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் விவேக் மரணத்திற்கான 3 காரணிகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

விவேக்கிற்கு ஏற்பட்டுள்ள மாரடைப்பை சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

3 நிலைகளை கடந்த அதிதீவிர நிலையாக கருதப்படும் இத்தகைய மாரடைப்பு ஒருவருக்கு ஏற்பட்டால் எந்த ஒரு வலியையும் கொடுக்காமல் சட்டென்று இருதயத்துக்கு செல்லும் ரத்தத்தை உறைய வைத்து கிட்னி, மூளை என அடுத்தடுத்த பாகங்களையும் செயல் இழக்க வைத்து கோமா நிலைக்கு கொண்டு சென்று விபரீத உயிரிழப்பை ஏற்படுத்தி விடும் என்கின்றனர். இது போன்ற சைலண்ட் மாரடைப்பு மரணங்கள் தூக்கத்திலேயே பலருக்கு நிகழ்ந்துள்ளதாகவும் விவேக் விஐபி என்பதால் வெளி உலகிற்கு தெரிகிறது என்கின்றனர்.

இந்த வகையான மாரடைப்பு ஏற்பட்டால் அதிக பட்சம் ஒரு மணி நேரத்திற்குள் அவரை மீட்டுக் கொண்டுவர என்னென்ன முதல் உதவிகள் செய்ய வேண்டுமோ ? அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டும் விவேக் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களையும், சர்க்கரை நோயாளிகளையும் சைலண்ட் மாரடைப்பு எளிதில் தாக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சென்னை, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் ஜெயந்தி கூறுகையில், "நடிகர் விவேக்குக்கு ஆஞ்சியோகிராம் செய்து பார்த்தபோது, 100 சதவிகிதம் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஒருநாளில் மட்டுமே அவரோடு சேர்த்து 830 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். அவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லையே. கண்டிப்பாக, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும் தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

You'r reading விவேக் மரணத்திற்கு இது தான் காரணம்..! Originally posted on The Subeditor Tamil

More Cinema News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை