கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.
கடந்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவியபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்தவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். தனது சொந்த செலவில் மக்களுக்கு என்ன தேவையோ அந்த உதவிகளை செய்து வந்தார். பாலிவுட்டில் வில்லனாக நடித்தாலும், தன்னை ஒரு ஹீரோவாக மக்கள் மத்தியில் முன்னிலைபடுத்திக்கொண்டார் சோனு சூட்.
இது தொடர்பாக அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சோனு சூட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், சோனு சூட்டிடம் உதவி கோரி பல்வேறு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. சோஷியல் மீடியாவிலிருந்தும் அவருக்கு கோரிக்கைகள் வருகின்றன. இதனால், கொரோனாவால் சிகிச்சையில் இருந்து வரும் நிலையிலும் சமூக சேவையை தொடர்ந்து வருகிறார் சோனு சூட். தேவைப்படுபவர்களுக்கு அவர்களுக்கான உதவிகளை சமூக வலைதளங்கள் மூலமே செய்து வருகிறார்.
அண்மையில் ஒருவர், கொரோனாவால் தனது தந்தைக்கு 75 சதவீதம் நுழையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குர்கான் மருத்துவமனையில் படுக்கை வசதி அளிக்கப்படாததால் தவித்து வருவதாக சோனு சூட்டிற்கு தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த சோனு சூட், அடுத்த அரை மணி நேரத்தில் படுக்கை வசதி கிடைத்து விடும். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் தந்தை விரைவில் குணமடைய வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
சொன்னபடியே அவருக்கு உதவியும் செய்துள்ளார் சோனு சூட். இதுபோல் பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார் சோனு சூட். அவரது இந்த உதவியை அறிந்த பலரும் அவரை மெச்சி வருகின்றனர்.