சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட் மற்றும் ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி வளாகம் சென்னை குரோம்பேட்டையில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமானம் ஓட்டுதல் மையத்தின் கவுரவ ஆலோசகராக நடிகர் அஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஆளில்லா விமான சோதனை பைலட் ஆகவும் மாணவர்களுக்கு இதுதொடர்பான பயிற்சி அளிக்கும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நடிகர் அஜித்துக்கு ஆலோசகர் பணிக்காக மாதம் 1000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சம்பளப் பணத்தை மாணவர்களின் கல்விக்காக செலவழிக்குமாறு பல்கலைக்கழகத்திடமே பணத்தை திருப்பி அளித்துவிடுவதாக அஜித் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் ஆளில்லா விமான சோதனை ஓட்டம் தொடர்பான சர்வதேச போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளன.
இதற்காகவே நடிகர் அஜித் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் இதற்கான முதல் வகுப்பில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் இன்று காலை முதல் குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி வளாகத்தின் ஏரோ மாடலிங் துறையில் வகுப்பு எடுத்து வருகிறார்.