நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ள நிலையில் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலமான ஆந்திரா, கேரளா, மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்வு மையத்தை ஒதுக்கி மாணவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய அரசு.
தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் 2 மாணவர்களுக்கு ரயில் கட்டணம் மற்றும் போக்குவரத்து செலவுகளை தானே ஏற்றுக்கொள்கிறேன் என்று ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டுக்களை வாங்கிவருகிறார் நடிகர் பிரசன்னா. நீட் தேர்வு எழுத பெற்ற அனுமதி சீட்டினை காட்டினால் அவர்களின் குடும்ப சூழ்நிலையை பார்த்து உடனே பயண சீட்டு எடுத்து தருவதாக பதிவிட்டுள்ளார் பிரசன்னா.
அவர் தனியார் செய்தி ஊடகத்திற்கு கூறியதாவது, மக்களுடைய கஷ்டங்கள் ஆள்பவர்களுக்கு மத்திய அல்லது மாநில அரசுகளுக்கு புரிவதில்லை.இவ்வளவு வளர்ந்த ஒரு மாநிலத்தில் நீட் தேர்வுக்கு (தேர்வு மையம்) சென்டர் அமைக்க முடியவில்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு கல்வி நிறுவனங்கள் இருந்தும் சென்டர் அமைப்பதில் என்ன சிக்கல்கள் இருக்க முடியும் என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருப்பதால் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுகிறது. வெளிமாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதிவிட்டு வருவது அணைத்து தரப்பு மாணவர்களுக்கு அவ்வளவு சுலபமானதாக இருக்க முடியாது.
பிரசன்னாவின் ட்விட்டர் பதிவை பார்த்து பலதரப்பினர் தாங்களும் இது போன்ற உதவியை செய்ய தயார் எனவும் நீட் எழுதும் மாணவர்களுக்கு போக்குவரத்து செலவுகளை தாங்கள் ஏற்க தயார் என்று ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.