பசுமை வழி சாலை என்ற பெயரில் சென்னையில் இருந்து சேலத்திற்கு 8 வழிச்சாலை அமைய இருக்கிறது. இந்த திட்டத்திற்காக தாம்பரம், திருவண்ணாமலை அரூர் வழியாக சேலம் செல்லும் 8 வழி சாலை திட்டம் போடப்பட்டுள்ளது.
தற்போது 4 வழி சாலையாக உள்ள சென்னை - சேலம் வழி சுமார் 330 கிலோமீட்டர் தொலைவு கொண்டது. புதியதாக அமைய இருக்கும் 8 வழி பசுமைச்சாலை 270 கிலோமீட்டர் தொலைவுகொண்டது. இதனால், பயண நேரம் 3 மணி நேரம் வரை குறைய வாய்ப்புள்ளது.
இந்த திட்டம் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை கடந்து செல்வதால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்,பல நூறு கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகும். அதனால் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அந்த மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள்.
8 மலைகள் உடைக்கப்படும், 3 இடங்களில் குகைகள் அமைக்கப்படும், இதனால் இயற்கை வளங்கள் அழிந்துபோக நேர்ந்திடும் என்று பலர் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
நடிகர் விவேக் இன்று ஒரு ட்விட்டர் பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் "தேசக்கட்டுமானம் அவசியம் தான், ஆனால் காடுகள், வயல்களை அழித்து கட்டுவது, மக்களுக்கும் விவசாயத்திற்கும் பெரும் அபாயம் அல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரேசில் போல் மாற்றுவழியில் பாலம் போட இயலுமா? பொறியியல் வல்லுநர்கள் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார் விவேக்.