லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படத்தின் டீஸர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படத்தின் பட்ஜெட் ரூ.400 கோடி என அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம், சிஜி கம்பெனிகளின் சொதப்பல்களால், காலதாமதம் ஆனது மட்டுமின்றி, சிஜி பணிகளுக்கு மட்டுமே ரூ.543 கோடி செலவானது என சர்வதேச நாளிதழான வெரைட்டி வெளியிட்ட அட்டைப் படத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வசீகரன் மற்றும் சிட்டி கதாபாத்திரங்களில் மீண்டும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளார். பாலிவுட் நாயகன் அக்ஷய் குமார், ரிச்செர்ட் எனும் விஞ்ஞானியாகவும் பறவைகள் விரும்பியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
செல்போன்களின் கதிர்வீச்சால், மனிதர்கள் பறவை இனத்தை அழிப்பதைக் கண்டு பொங்கும் விஞ்ஞானி ரிச்சர்ட், பறவை அரக்கனாக மாறி மிகப்பெரிய நெட்வொர்க் நிறுவன உரிமையாளர்களை அழிப்பதாகவும், அதனை தடுக்க, சிட்டியை வசீகரன் மீண்டும் உருவாக்க, பறவை அரக்கனை அழிக்க செல்லும் சிட்டி, அவனது பிளாஷ்பேக்கை கேட்டு, வில்லனாக 2.0வாக மாற, சிட்டியை மாற்றவும், பறவை அரக்கனை அழிக்கவும், வசீகரன் (எமி ஜாக்சன்) பெண் ரோபோவை உருவாக்கி காதல் கொள்ள செய்து, க்ளைமேக்சில் வெற்றிக் கொள்வதே கதையின் கரு என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கு எல்லாம், பதில் நாளைய டீசரில் கிடைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்!