ஆர்.டி. ராஜாவின் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான சீமராஜா படம், முதல் நாள் வசூலாக 13.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா, தனது டிவிட்டர் பக்கத்தில், அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளார்.
தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில், பா. ரஞ்சித் – ரஜினி கூட்டணியில் இந்தாண்டு வெளியான காலா திரைப்படம் முதல் நாள் வசூலாக 12.5 கோடியை ஈட்டியதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தன.
இதனால், இந்தாண்டின் தமிழ் சினிமாவின் சிறந்த ஓபனிங் படமான காலா படத்தை சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் முந்தியுள்ளது.
ரஜினி, விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன் வசூல்ராஜாவாக தமிழ் சினிமாவில் வரத் தொடங்கி விட்டார்.
சீமராஜா படத்திற்கு, விமர்சகர்கள் மத்தியில், நெகட்டிவ் கருத்துகள் எழுந்தாலும், அனைத்து விமர்சகர்களும், படத்தில் வரும் பாகுபலி போன்ற பீரியாடிக் போர்ஷனில் சிவகார்த்திகேயன், வலரி சுற்றும் கடம்பவேல் ராஜாவாக மிரட்டியுள்ளார் என்பதையும், முத்துவேல்ராஜாவின் பிரம்மாண்ட ஆர்ட் ஒர்க் மற்றும் பொன்ராமின் நேர்த்தியையும் பாராட்ட தவறவில்லை.
இதனால், விமர்சனங்கள் வெளியான பின்பும், வெள்ளிக்கிழமையான நேற்றும், தியேட்டர்கள் திருவிழாக்கோலம் போல காட்சியளித்தன. விடுமுறை நாட்களான, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் முன்னதாகவே டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டு ஹவுஸ் ஃபுல் ஆனதால், நிச்சயம் இந்த சீமராஜா, இந்த வாரத்தின் மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸை பிடித்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அடுத்த வாரம், வரவுள்ள சாமி ஸ்கொயர் படத்திற்கும் சீமராஜா டஃப் கொடுத்தால், மிகப்பெரிய லாபத்தை படக்குழு ஈட்டும் என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.