குறைந்த செலவில் நீண்ட ஆயுளைப் பெற பெண்களுக்கான தங்க பஸ்பம்

சித்தர்கள் இதனை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர்

Sep 15, 2018, 10:12 AM IST

வீட்டின் பின்புறம் முன்புறம் என எங்கு வைத்தாலும் இப்பூவின் அழகைக் காண பல கண்கள் தேவை. அடர்ந்தப் பச்சை புதரில் சிவப்பு நிறத்தில் பவளம் போல ஜொலிக்கும்.

இவை நவமணிகளுக்கு இணையாக கூறலாம். இந்த செடியை அந்த காலம் முதல் இந்த காலம் வரை அனைவரின் வீட்டிலும் வைத்து அழகு பார்க்கின்றோம். இச்செடி ஒரு மருத்துவருக்கு இணையானது.

என்னடா? அப்பேற்பட்ட செடி எது? என்று தானே யோசிக்கிறீர்கள். அதுதான் செம்பருத்தி செடி.

இச்செடி இரண்டு வகைகளில் உள்ளது. ஒன்று, அடுக்குச் செம்பருத்தி, இன்னொன்று ஓர் அடுக்குச் செம்பருத்தி. இது ஐந்து அடுக்கு இதழ்களைக் கொண்டு அடர்ந்து காணப்படுகிறது.

மருத்துவ ரீதியில் மிகவும் சிறந்தது. சித்தர்கள் இதனை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர். இதனால் இதை தங்க புஷ்பம் என்றும் அழைக்கின்றனர்.

தங்கச் சத்து இப்பூவில் அதிகம் இருப்பதால் தாதுவிருத்திக்கு மிகவும் சிறந்தது. தினமும் 10 பூவினை மென்று தின்று பால் அருந்தினால் நாற்பது நாளில் தாது விருத்தி ஏற்படும்.

கோடை வெயிலில் அனைவரையும் பாதிக்கின்ற ஒன்றுதான் உடல் உஷ்ணம். இதை குணப்படுத்த ஐந்து செம்பருத்திப் பூவை எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி, எடுத்து வைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும்.

காய்ந்த செம்பருத்தி இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.

பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டு வர குணமாகும். இப்பூக்கள் இதய கோளாறையும், கர்ப்பக்கோளாறையும் நீக்க வல்லது.

இலைகளை அரைத்து குளிக்கும் பொழுது ஷாம்பு மாதிரி உபயோகிக்கலாம். முடிக்கு நல்லது. இதழ்களின் வடிசாறு சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும்.

கூந்தல் தைலம்:

400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த, பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடி, பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை – மாலை எண்ணெயை கலக்கிவிட்டு முடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பதப்படுத்திக் கொண்டு, தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வர முடி அடர்ந்து வளரும். அதோடு கருமையாகவும் இருக்கும்.

காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப் புண் ஆறும். வெள்ளைப் படுதலும் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும்.

இதுபோன்ற மருத்துவ குணம் கொண்ட செடியை வீட்டினுள் வைத்து நோயை விரட்டுங்கள்.ஆரோக்கியத்தோடு வாழுங்கள்.

You'r reading குறைந்த செலவில் நீண்ட ஆயுளைப் பெற பெண்களுக்கான தங்க பஸ்பம் Originally posted on The Subeditor Tamil

More Aval News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை