ராவணன், கடல், ஓகே கண்மணி, காற்று வெளியிடை என நான்கு தொடர் தோல்விகளுக்குப் பின்னரும் மணிரத்னம் படம் என்றால் அது சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைத்துறையில் உள்ள உச்ச நட்சத்திரங்களுக்கும் ஒரு எதிர்பார்ப்பு பிரமிப்பு தான். இத்தனை எதிர்பார்ப்புகளையும் இந்த படத்தில் மணிரத்னம் பூர்த்தி செய்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்..
வெற்றிக்கு உதவிய நட்சத்திர பட்டாளம்:
மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்திற்கு பின்னர் மாபெரும் நட்சத்திர பட்டாளத்துடன் ‘செக்கச் சிவந்த வானம்’ வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு அவரது பல படங்களில் நடித்த அரவிந்த் சாமிக்குத் தான் இந்த படத்தில் மிகப்பெரிய இடம் என்பது மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு சின்ன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தாலும், படத்திற்கு அது பலமாகவே அமைந்தது.
அரவிந்த்சாமி, அருண்விஜ, சிம்பு, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் என நட்சத்திர பட்டாளமே இருந்தாலும், அத்தனை பேருக்கும் மணிரத்னம் தீனி போடவில்லை.
ஆனால், கிடைத்த கேப்பில் எல்லாம் அத்தனை பெரும் பெரிய சிக்ஸர்களை அடிக்க முயன்றனர். அதில் விஜய்சேதுபதியின் சிக்ஸர் மட்டுமே ஸ்டேடியத்தை தாண்டிச் சென்றது.
அருண் விஜய்யின் கிளாசான நடிப்பு, சிம்புவின் மாஸான நடிப்பு படத்தை ரசிகர்கள் விரும்பும் படி கொண்டு சென்றது. ஜோதிகாவின் ஸ்பெஷல் பெர்ஃபார்மன்ஸ் சூப்பர். ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அதிதி ராவுக்கு பெரிய ஸ்கோப் படத்தில் இல்லை.
பிரகாஷ் ராஜை மையமாக வைத்தே படம் நகர்வதால், பிரகாஷ் ராஜ் இல்லாத காட்சிகளிலும் அவர் இருப்பது போன்று தெரிவது மணிரத்னத்தின் மாஸ்டர் டச்.
படத்தின் கதைக் களம்:
பெரிய மனிதன், சமூக சேவகன் என்ற போர்வையில் வலம் வரும் டான் சேனாபதியாக பிரகாஷ்ராஜ் மிரட்டியுள்ளார். அவரை கொலை செய்ய ஒரு கூட்டம் போடும் திட்டத்தில், விபத்தில் மரணப்படுக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் பிரகாஷ்ராஜ்.
பிரகாஷ் ராஜ் சொல்லும் வேலைகளை செய்யும் வலதுகையாக அவரது மூத்த மகன் அரவிந்த்சாமி தெறிக்க விடுகிறார். வெளிநாட்டில் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப்படும் அருண் விஜய் மற்றும் சிம்பு தந்தையை போலவே டானாகும் ஆசையில் வளர்கின்றனர்.
ஒரு கட்டத்தில் சேனாபதி கொலை செய்யப்படுகிறார். அவரது கொலைக்கு யார் காரணம் என்ற கேள்வியை படத்தின் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்டில் அவிழ்க்கிறார் மணிரத்னம். இவராகத்தான் இருப்பார் என்று எதிர்பார்க்க வைக்கும் ஜாலத்தை சிறப்பாக செய்து கிளாப்ஸ் அள்ளுகிறார் இயக்குநர் மணிரத்னம். விஜய்சேதுபதிக்கு படத்தில் கம்மியான காட்சிகள் என்றாலும், தனது வசனத்தால், தியேட்டர்களில் கைதட்டல்களை அள்ளுகிறார் மனுஷன். டயானா எரப்பாவுடன் காரில் வரும் சிம்புவின் அறிமுக காட்சி மிகவும் மாஸாகவும், அவரை போலீஸ் துரத்து சேஸ் காட்சியாகவும் பட்டையை கிளப்பியுள்ளது.
படத்தின் இன்னொரு நாயகன்:
ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்துக்கு ஐந்தாவது ஹீரோவாக உதவியுள்ளது. எந்த பாடலும் படத்தின் நகர்வை தொந்தரவு செய்யாத வண்ணம் மாண்டேஜ் பாடலாக அமைந்துள்ளது சூப்பர். ’மழை குருவி பாடல்’ ரம்மியமாக மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. மற்ற அனைத்துமே மாண்டேஜ் பாடல்கள் தான். படத்தின் துவக்கத்தில் வரும் ‘செவந்து போச்சு நெஞ்சு’ பாடல் படத்தின் கதைக்குள் ஆடியன்ஸை இழுத்தச் செல்லும் வேலையை கச்சிதமாக செய்கிறது.
சிவந்ததா? வெளுத்ததா?
ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கோல்ட் ப்ளடட் கேங்ஸ்டர் கதையை மணிரத்னம் எடுத்துள்ளார். படத்தின் பல இடங்கள் மற்றும் திரைக்கதை சிவந்து காணப்படுகிறது.
ஆனால், மணிரத்னத்துக்கு உரித்தான ஸ்லோ மற்றும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தவும் அவர்களுக்கான பாத்திரப் படைப்புகளை விவரிக்கும் முதல் பாதி படத்தின் எதிர்பார்ப்பை முழுவதும் பூர்த்தி செய்யவில்லை. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஆனால், மணிரத்னம் படங்களை பல முறை பார்த்தால் தான் புரியும் என்ற சொல்லிற்கே இடமில்லை. இது தெளிவான மற்றும் சாதாரண பழிவாங்கும் கதையாக அமைந்துள்ளதால் ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது படத்தின் மைனஸ்!
செக்கச்சிவந்த வானம் ரேட்டிங்: 3.25/5