அருவி படத்தில் தனது அபாரமான நடிப்பு திறமையால், சினிமா ரசிகர்களை களவாடிய அதிதி பாலன், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பை வரவேற்கிறேன். சிறு வயதில் 3முறை சபரிமலைக்கு சென்றுள்ளேன். தற்போது மீண்டும், செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
இயக்குநர் அருண்பிரபுவின் இயக்கத்தில் வெளியான ‘அருவி’ படம் மூலம் சினிமா உலகில் நாயகியாக அறிமுகமானார் அதிதி பாலன். முதல் படமே ‘எய்ட்ஸ்’ நோயாளி கதாபாத்திரம் என்பதால், சற்றும் பயப்படாமல், இவர் நடித்த நடிப்பை பார்த்து, தமிழ் சினிமா உலகமே மிரட்சியில் ஆழ்ந்தது. பல விருதுகள் இவருக்கு அருவி படம் மூலம் கிடைத்தது.
தனது அடுத்த படத்தின் அறிவிப்பை இதுவரை வெளியிடாத அதிதி பாலன், ஈரோட்டில், நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அதிதியிடம் செய்தியாளர்கள், சமீபத்தில், சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு சற்றும் தயங்காமல், இது பெண்களுக்கு கிடைத்த நல்ல தீர்ப்பு என்றார். பாரம்பரியம் தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தாலும், பெண்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்ப்பு என்றே தான் கருதுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், சிறு வயதில் 3 முறை சபரிமலைக்கு சென்று வந்துள்ளதாகவும், இந்த தீர்ப்பினால், தற்போது, மீண்டும் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், ஓரின சேர்க்கை குறித்த தீர்ப்புக்கும், தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல என்ற தீர்ப்புக்கும் அதிதி பாலன் வரவேற்பளித்துள்ளார்.