‘பத்மாவதி’ திரைப்படத்தைப் பார்த்து கருத்துகளைத் தெரிவிக்குமாறு, ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்களுக்கு, மத்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே உள்ளிட்டோரின் நடிப்பில், ரூ. 190 கோடி செலவில் ‘பத்மாவதி’ திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படமாகும்.
இந்நிலையில், ‘பத்மாவதி’ திரைப்படம் ராஜபுத்திர வம்ச மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது என்று கூறி, சங்-பரிவார அமைப்புக்களும், ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த அமைப்புக்களும் பிரச்சனையைக் கிளப்பி வருகின்றன.
படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டாலும், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, படத்தின் வரலாற்றுத் தகவல்களை ஆய்வுசெய்ய முன்னாள் அரச குடும்பத்தினர், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட 6 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பத்மாவதி’ படத்தைப் பார்த்துவிட்டு பின்னர் கருத்து கூறுமாறு, ராஜஸ்தானைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர்களான கான்கரோத், பி.எல்.குப்தா ஆகியோருக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.