2.0, காலாவிற்குப் பிறகு என்ன என்று ஆண்டவன் என்ன நினைக்கிறானோ பார்ப்போம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார், அடில் ஹுசைன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 2.0. இந்த திரைப்படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
2.0 திரைப்படம் முதலில் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதன் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடந்தது. இந்நிலையில், இந்த திரைப்படம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த நான்கு நாட்களாக தனது அரசியல் பிரவேசம் குறித்து தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “2.0 படம் கிராபிக்ஸ் பணி காரணமாக ஜனவரி 26-க்கு பதிலாக ஏப்ரல் 14-ல் வெளியாகும்.
2.0 மாதிரி இனி ஒரு படம் வருமா என்பது போல இந்தப் படம் இருக்கும், காலாவில் வித்தியாசமான ரஜினியை ரஞ்சித் அறிமுகம் செய்துள்ளார். 2.0, காலாவிற்குப் பிறகு என்ன என்று ஆண்டவன் என்ன நினைக்கிறானோ பார்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.