ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலின் மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இளம் இசைப்புயல் அனிருத்தின் 28வது பிறந்த தினம் இன்று.
நடிகர் ரவி ராகவேந்திரா மற்றும் கர்நாடக நடன கலைஞர் லக்ஷ்மி ரவிச்சந்தருக்கு மகனாக அக்டோபர் 16, 1990ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் அனிருத். 2011 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் 3 படத்திற்கு இசையமைத்து, முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்தார்.
சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த எதிர்நீச்சல் படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்தது. டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், வேலையில்லா பட்டதாரி என அடுத்தடுத்து தனது டிஎன்ஏ முத்திரையை பதித்தார் அனிருத்.
தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு இசையமைத்து வந்த அனிருத்துக்கு கத்தி படத்தின் மூலம் விஜய்க்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. கத்தியின் காயின் ஃபைட் தீம் மியூசிக், ரசிகர்களின் காலர் டியூனாக மாறியது. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
தளபதியை தொடர்ந்து தலைக்கு இவர் போட்ட ஆளுமா டோலுமா பட்டி தொட்டி சிட்டி எல்லாம் தாண்டி வெளிநாட்டு ரசிகர்களையும் ஆடவைத்தது.
சிவகார்த்திகேயனுக்கு துணை நின்ற அனிருத்தின் இசை, நானும் ரவுடிதான் படத்தில் விஜய்சேதுபதிக்கும் தூணாக மாறியது. அதே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு இசையமைத்து, சூர்யாவிற்கும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார் அனிருத். இளம் வயதில், ஏகப்பட்ட ஹிட்களை கொடுத்து தமிழ் சினிமாவின் அடுத்த இசைப்புயலாகவே மாறியுள்ளார் அனிருத். தற்போது, சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்துக்கு வேற லெவல் வெறித்தனத்தோடு இசையமைத்து வருகிறார்.
சொடக்கு மேல சொடக்கு போடுது மற்றும் கோலமாவு கோகிலாவின் எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சி டி பாடல் இந்த ஆண்டின் பேவரைட் பாடல்களாக மாறியுள்ளது. இசையமைப்பது மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களின் இசையில், இவர் பாடும் யாஞ்சி யாஞ்சி போன்ற பாடல்களும் ஹிட்டடிக்க தவறியது இல்லை.
அடுத்த ஆண்டு பேட்ட இசையை கேட்க ரசிகர்கள் தீவிர வெயிட்டிங், வாழ்த்துகள் அனிருத்!